அரசியல் நெருக்கடிக்கு 7 நாட்களுக்குள் தீர்வு! – ரணில் மீது சொற்போர் தொடுத்து மைத்திரி விசேட உரை

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்துக்கு இன்னும் ஏழு நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்தார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மாநாடு  இன்று பிற்பகல் கொழும்பில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நல்லாட்சிக் கோட்பாட்டை ரணில் விக்கிரமசிங்கவே படுகொலை செய்தார். 62 இலட்சம் பேர் வழங்கிய ஆணையைக் காட்டிக் கொடுத்துவிட்டார். அவர் நாட்டுக்குப் பொருத்தமற்ற அரசியல்வாதியாவார். நாட்டையும், ஐக்கிய தேசியக் கட்சியையும், ஏன் என்னையும்கூட சின்னாப்பின்னமாக்கிவிட்டார்.

தனிப்பட்ட பகைமை காரணமாக ரணிலைப் பதவியை விட்டு நான் தூக்கவில்லை. நாட்டின் நலன் கருதியே அந்த முடிவை எடுத்தேன். 2014 ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் திகதியும், 2018 ஒக்டோபர் 26ஆம் திகதியும் என்னால் எடுக்கப்பட்ட முடிவுகள் மிகச் சரியானவை. அதில் துளியளவேனும் தவறில்லை என்பதை உணர்கின்றேன்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்துக்கு நான் காரணமல்ல. இவை அனைத்துக்கும் ரணிலே காரணம். எனவே, 225 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓரணியில் திரண்டு வந்து சொன்னாலும், ரணிலை மீண்டும் பிரமராக நியமிக்கமாட்டேன்.

எனினும், அரசியல் குழப்பத்துக்கு இன்னும் 7 நாட்களுக்குள் முடிவு கட்டப்படும் என்ற உத்தரவாதத்தை என்னால் வழங்கமுடியும்.

ரணில் விக்கிரமசிங்கவின் மோசமான தீவிர இடதுசாரி தாராளவாத அரசியலை சிறிலங்கா சுதந்திர கட்சி தோற்கடிக்க வேண்டும்” என்றும் ஜனாதிபதி கூறினார்.அதேவேளை, வடக்கு மக்களையும் ரணில் விக்கிரமசிங்க ஏமாற்றிவிட்டதாக குற்றஞ்சாட்டினார்.

ஜனாதிபதி தனது நீண்ட உரையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மீது சரமாரியாக விமர்சனங்களை முன்வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. உரை முழுவதும் ரணில் மீது தொடுக்கப்பட்ட சொற்போராகவே  அமைந்திருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *