அரசமைப்புடன் விளையாடாதீர்! சர்வாதிகாரியாக செயற்படாதீர்!! – மைத்திரிக்கு ரணில் கடுந்தொனியில் எச்சரிக்கை

“சட்டவிரோதமான முறையில் பிரதமர் பதவியில் இருந்த மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராகவும், அவர் தலைமையில் இருந்த போலி அமைச்சரவைக்கு எதிராகவும் மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கவனத்தில்கொண்டு செயற்பட வேண்டும். ஜனாதிபதி சர்வாதிகாரியாக நடக்காமல் அரசமைப்பைப் பின்பற்றி நடக்க வேண்டும். இதுதான் அவருக்கு அழகு. இல்லையேல் பெரும் விளைவுகளை அவரே சந்திக்க வேண்டி வரும்.”

– இவ்வாறு கடும் எச்சரிக்கை விடுத்தார் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க.

அலரி மாளிகையில் இன்று மதியம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஜனாதிபதி அரசமைப்புக்கு முரணாக என்னைப் பிரதமர் பதவியிலிருந்து அகற்றி அந்த இடத்துக்கு மஹிந்த ராஜபக்ஷவை நியமித்தார். பெரும்பான்மைப் பலம் இல்லாத மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் புதிய அமைச்சரவையையும் அவர் நியமித்தார். இந்தச் சட்டவிரோத நடவடிக்கைகளைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் தீர்மானங்களை நாம் நிறைவேற்றினோம். ஆனால், அதனைப் பொருட்படுத்தாமல் தான்தோன்றித்தனமாக ஜனாதிபதி செயற்பட்டார். சர்வாதிகாரத்துடன் அவர் நடந்தார் – நடக்கின்றார். இந்நிலையிலேயே, நாம் நீதிமன்றத்தை நாடிச் சென்றோம்.

சட்டவிரோதமான முறையில் பிரதமர் பதவியில் இருந்த மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராகவும், அவர் தலைமையில் இருந்த போலி அமைச்சரவைக்கு எதிராகவும் மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. எனவே, இனியாவது ஜனாதிபதி திருந்தி நடக்க வேண்டும். அவர் நினைத்தபடி – அவரின் சொந்த விருப்பத்துக்கிணங்க பிரதமரைத் தீர்மானிக்க முடியாது.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலம் உள்ளவரே பிரதமராக நியமிக்கப்பட வேண்டும். அந்தப் பெரும்பான்மைப் பலத்துடன் நாம் இருக்கின்றோம். இதை ஜனாதிபதிக்குப் பல தடவைகள் புரியவும் வைத்துள்ளோம்.

இலங்கை ஒரு ஜனநாயக நாடு. ஜனநாயகத்தை நிலைநிறுத்தவே நாம் போராடி வருகின்றோம். எமது நிலைப்பாடே சரியானது என்பதை நீதிமன்றத் தீர்ப்புகள் எடுத்துக்காட்டுகின்றன.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதும் அரசமைப்பை மீறும் செயல் என அன்றே நாம் சுட்டிக்காட்டினோம். உயர்நீதிமன்றத்தின் இடைக்காலத் தடைத் தீர்ப்பும் அதை உறுதிப்படுத்தியது.

இங்கு சர்வாதிகார ஆட்சிக்கு ஒருபோதும் இடமளியோம். எனவே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சர்வாதிகாரியாக நடக்காமல் அரசமைப்பைப் பின்பற்றி நடக்க வேண்டும். இதுதான் அவருக்கு அழகு. இல்லையேல் பெரும் விளைவுகளை அவரே சந்திக்க வேண்டி வரும்.

மக்கள் தம்முடன்தான் இருக்கின்றனர் எனக் கூறி அரசமைப்பை நீக்குவதற்கு ஹிட்லர்  அன்று நடவடிக்கை எடுத்தார். ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளும் நோக்கில் சட்டமொன்றை இயற்றினார். இவ்வாறு இங்கும் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள், மக்கள் தமது பின்னாலேயே நிற்கின்றனர் என்று வதந்தி பரப்புகின்ற்னர்.

நாம் அரசமைப்பை மதித்து நாட்டு மக்களின் நலன் கருதியே செயற்படுகின்றோம். எமது கட்சிக்குள் முரண்பாடுகள் இல்லை. நாம் ஓரணியில் செயற்படுகின்றோம்.

ஜனாதிபதியின் விருப்பதுக்கிணங்க நாடாளுமன்றத் தேர்தல்தான் தேவை என்றால் சட்டபூர்வமான அரசு ஒன்று முதலில் ஏற்படுத்தப்பட வேண்டும். பின்னர் விசேட தீர்மானமொன்றை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி தேர்தலுக்குச் செல்ல நாம் தயார். தேர்தலுக்குப் பயந்தவர்கள் நாம் அல்லர். எந்தத் தேர்தலையும் எதிர்கொள்ள நாம் தயாராக இருக்கின்றோம்.

இந்த இக்கட்டான நிலைமையில் அரசமைப்பை பாதுகாக்க நாம் கடமைப்பட்டுள்ளோம். அரசமைப்புடன் விளையாடவேண்டாம் எனச் சகலரையும் கேட்டுக்கொள்கின்றேன். அதை மதிக்காவிட்டால் இருந்து பயன் இல்லை. ஜனநாயகக் கட்டமைப்பின் கீழ் செயற்பட அனைவரும் முன்வரவேண்டும்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *