ராஜீவ் கொலை வழக்கு: 7பேரையும் விடுவிக்குமாறு வலியுறுத்தி தமிழகத்தில் போராட்டம்!

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை காலம் முடிந்தும் விடுதலை செய்யப்படாமல் உள்ள பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்யக் கோரி  ஆளுநர் மாளிகை நோக்கி முற்றுகை போராட்டம் இன்று நடத்தப்பட்டது. இந்த போராட்டத்துக்கு தி.மு.க. உள்ளிட்ட தோழமை கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன.

அதன்படி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் சைதாப்பேட்டை சின்னமலை அருகே ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய வைகோ, 7 பேர்களை விடுதலை செய்ய கவர்னர் மறுத்து வருவது அரசியல் சாசன சட்டத்துக்கு விரோதமானது. கண்டிக்கத்தக்கது. உடனே அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றார்.

போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி., மாவட்டச் செயலாளர்கள் மா.சுப்பிரமணியன், சேகர் பாபு, நிர்வாகிகள் சைதை குணசேகரன், பாலவாக்கம் விசுவ நாதன், சோமு, மணி மாறன், ஏ.எம்.வி. பிரபாகர் ராஜா உள்ளிட்ட ஏராளமான தி.மு.க. நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்தனர்.

இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மற்றும் வன்னியரசு, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், துணைப் பொதுச் செயலாளர் சத்ரியன் வேணுகோபால், மே-17 இயக்க நிர்வாகிகள், இயக்கத்தினர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

போராட்டத்தில் மத்திய- மாநில அரசுகளை கண்டித்து கோ‌ஷம் எழுப்பினார்கள். விடுதலை செய், விடுதலை செய், 7 பேர்களை விடுதலை செய் உள்ளிட்ட பல்வேறு கோ‌ஷங்களை எழுப்பினார்கள்.

இந்த போராட்டத்தையொட்டி ஏராளமான போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *