மொபைலை நோண்டாது சாப்பிட்டால் உணவு இலவசம்!

குடும்பத்தினர் அனைவரும் கைபேசியை வைத்துவிட்டு ஒன்றாக அமர்ந்து ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டே சாப்பிடுவதென்பது மிகவும் கடினமான, அரிதான விஷயமாகிவிட்டது. ஆனால், இதை தனது புதுமையான யோசனையின் மூலம் சாத்தியப்படுத்துகிறது உணவகம் ஒன்று.

குடும்பமாக செல்லும்போது பெற்றோர் தங்களது கைபேசி உள்ளிட்ட தொழில்நுட்ப கருவிகளை உணவக பணியாளர்களிடம் கொடுத்துவிட்டால் அவர்களது குழந்தைகளுக்கான உணவு இலவசமாக வழங்கப்படும். இதை லண்டனை சேர்ந்த உணவகமொன்று சோதனை ரீதியில் செயற்படுத்தி வருகிறது.

இதுகுறித்து நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின்போது, பெற்றோர்கள் தங்களது கைப்பேசிகளை வைத்துவிட்டு தங்களுடன் அதிக நேரத்தை செலவிடுவதையே குழந்தைகள் விரும்புவது தெரியவந்துள்ளதாக பிராங்கி & பென்னி என்ற அந்த உணவகம் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி, 10 சதவீத குழந்தைகள் தங்களது பெற்றோரின் கைபேசிகளை மறைத்துவைத்து பெற்றோரின் கவனத்தை பெறுவதற்கு முயற்சித்ததாக அது மேலும் கூறுகிறது.

இந்த சோதனை முயற்சியில் பங்கேற்பதற்கு வாடிக்கையாளர்கள் வற்புறுத்தப்படமாட்டார்கள் என்று சுமார் 250 கிளைகளை கொண்ட இந்த உணவகம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. மேலும், இந்த சோதனை முயற்சி வெற்றிபெறும் பட்சத்தில் இம்முறை நிரந்தரமாக்கப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த உணவகத்தின் புதுமையான முயற்சியை வரவேற்று பலர் கருத்துத் தெரிவித்துள்ள நிலையில், சிலர் நம்பிக்கை இல்லாத வகையில் பதிவிட்டுள்ளனர்.

மிகவும் நல்ல யோசனை, ஆனால் குடும்பத்தினருக்கு என்ன பேசிக்கொள்வதென்று தெரியுமா?” என்று சூ லெம்மிங் என்பவர் பதிவிட்டுள்ளார்.

“குடும்பமாக வரும் எங்களது வாடிக்கையாளர்கள் உணவிற்காக அதிக நேரத்தை செலவிட வேண்டுமென்று நாங்கள் விரும்பினோம். எனவே, வாடிக்கையாளர்களிடமிருந்து கைபேசியை விலக்குவதன் மூலம் அவர்களை அதிக நேரம் செலவிட வைக்கும் இந்த யோசனையை செயற்படுத்தி வருகிறோம்” என்று அந்த உணவகத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *