இலங்கையின் படுமோசமான நிலை குறித்து இந்திய நாடாளுமன்றக் குழுவுக்கு விளக்கம்! – அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை

இலங்கை – இந்திய உறவுகள் குறித்தும், இலங்கையின் தற்போதைய படுமோசமான அரசியல் நிலவரங்கள் தொடர்பாகவும் இந்திய நாடாளுமன்றத்தின் வெளிவிவகார நிலையியல் குழுவுக்கு, இந்திய வெளிவிவகார அமைச்சின் மூத்த அதிகாரிகள் விளக்கமளிக்கவுள்ளனர்.

சசி தாரூர் தலைமையிலான இந்திய நாடாளுமன்றத்தின் வெளிவிவகார நிலையியல் குழுவுக்கு, இந்திய வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் எதிர்வரும் 14ஆம் திகதி, விளக்கமளிக்கவுள்ளனர் என்று, இந்திய நாடாளுமன்ற செயலகம் அறிவித்துள்ளது.

இந்த நிலையியல் குழுவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் அங்கம் வகிக்கின்றார்.

இந்தக் குழுவின் முன்பாக, இந்திய வெளிவிவகாரச் செயலர் விஜய் கோக்ஹலே தலைமையிலான மூத்த அதிகாரிகள் முன்னிலையாகி விளக்கமளிக்கவுள்ளனர்.

பாதுகாப்பு நோக்கில் இலங்கையின் உறுதித்தன்மை இந்தியாவின் நலனுக்கு முக்கியமானது என்ற வகையில், நிலையியல் குழு உறுப்பினர்கள், இலங்கையின் தற்போதைய அரசியல் நெருக்கடிகள் தொடர்பாக, நிச்சயம் கேள்வி எழுப்புவர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் விரிவடைந்திருப்பது, அது உள்நாட்டு அரசியலில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் ஆகியன குறித்தும் அறிந்துகொள்ள நிலையியல் குழு அக்கறை கொண்டுள்ளதாக மற்றொரு தகவல் தெரிவிக்கின்றது.

இலங்கையில் சீனாவின் தலையீடுகள் குறித்து இந்தியா கவலையடைந்துள்ள நிலையில், அதனைக் கையாளுவதற்கான வழிமுறைகள் குறித்து நிலையியல் குழு, கேள்விகளை எழுப்பும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *