அரசியல் குழப்பத்தால் ரூ. 1000 இற்கும் ஆப்பு! தொழிலாளர்கள் திண்டாட்டம் – 2019 இற்குள் நுழைகிறது பேச்சு!!

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்தால் தோட்டத்தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு குறித்தான பேச்சும் இழுத்தடிப்புக்கு  மத்தியிலேயே இடம்பெற்றுவருகின்றது. இதனால், மலையக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒன்றரை வருடங்கள் இழுத்தடிப்புக்கு பின்னர் -சொற்பஅளவு சம்பள உயர்வோடு 2016 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட கூட்டுஒப்பந்தமானது கடந்த மாதம் காலாவதியானது. அதை புதுப்பிப்பதற்குரிய பேச்சுகள் இம்முறை முன்கூட்டியே ஆரம்பமாகியிருந்தாலும் இன்னும் எவ்வித இணக்கப்பாடும் எட்டப்படவில்லை.

அடிப்படைச் சம்பளமாக ஆயிரம் ரூபாவை வழங்குவதற்கு முதலாளிமார் சம்மேளனம் மறுப்பு தெரிவித்துவருகின்றது. எனினும், விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை என்று கூட்டுஒப்பந்த பேச்சில்  கலந்துகொள்ளும் தொழிற்சங்கங்களும் விடாப்பிடியாக நிற்கின்றன.

கம்பனிகளுடன் பேசி பயனில்லை – வீதியில் இறங்கிப்போராடுமாறு தொழிலாளர்களுக்கு இதொகா அறைகூவல் விடுத்தது. இதன்படி கடந்த திங்களன்று மனிதசங்கிலிப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அத்துடன்,  பிரதமரின்  அவரச தலையீட்டையும் இதொகா கோரியது. தற்போது பிரதமர்  பதவியில்  மாற்றம் வரவுள்ளது. தெற்கில்  அரசியல் குழப்பமும்  உச்சம் தொட்டுள்ளது. எனவே, அடுத்தாண்டு ஆரம்பத்திலேயே சம்பள பேச்சு நிறைவுபெறும் என்றும், எதிர்பார்க்கப்படும் தொகை கிடைக்குமா என்பது சந்தேகமே என்றும் தொழிற்சங்கப்  பிரமுகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

சம்பள உயர்வு இன்மையாலும், வாழ்க்கைச்சுமை அதிகரிப்பாலும் பெரும் சிரமத்துக்கு மத்தியிலேயே தொழிலாளர்கள் தீபாவளியைக் கொண்டாடினர். டிசம்பர் மாதத்தில் பிள்ளைகளுக்குரிய பாடசாலை உபகரணங்களை வாங்கவேண்டியுள்ளது. இப்படி பல செலவுகள் இருப்பதால் தொழிலாளர்கள் திண்டாடிவருகின்றனர்.

 

கூட்டு ஒப்பந்தம்  என்றால் என்ன?
 
90 காலப்பகுதியில் பெருந்தோட்டங்கள் தனியார் கம்பனிகளுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டன. அதன்பின்னரே கூட்டுஒப்பந்த முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. அரச – தனியார் துறையினருக்கான சம்பளமானது சம்பள நிர்ணயச்சபையினூடாகவே நிர்ணயிக்கப்பட்டாலும் – மலையகத் தொழிலாளர்கள் விவகாரத்தில் மேற்படி சபை தலையிடாது.
எனவே, பெருந்தோட்டக் கம்பனிகளும், தொழிற்சங்கங்களும் பேச்சு நடத்தி பொது இணக்கப்பாட்டின் அடிப்படையில் சம்பளத்தை தீர்மானிக்கும் முறைமையே கூட்டுஒப்பந்தம் எனப்படுகின்றது.
பொருளாதார – வாழ்க்கைச்செலவு ஆகியவற்றுக்கேற்ப சம்பளம் வழங்கப்படவேண்டும் என்பதாலேயே இரண்டு வருடங்களுக்கு ஒருதடவை இவ்வொப்பந்தம் புதுப்பிக்கப்படுகின்றது.
கூட்டு ஒப்பந்தத்தில் சம்பளம் மட்டுமல்ல தொழிலாளர்களின் நலன்சார் விடயங்களும் தீர்மானிக்கப்படுகின்றன. இருந்தும் அந்த சரத்துகளை தோட்டக்கம்பனிகள் கடந்த காலங்களில் பின்பற்றவில்லை.  இதனால், ஒப்பந்தத்தின் முழுமையான நன்மையை தொழிலாளர்களால் நுகரமுடியாமலுள்ளமை வேதனைக்குரிய விடயமாகும்.
இலங்கைத்தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசியத் தோட்டத்தொழிலாளர் சங்கம், பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பு ஆகியன தொழிலாளர்கள் சார்பிலும் சுமார் 22 கம்பனிகள் நிர்வாகத்தின் சார்பிலும் பேச்சுகளில் பங்கேற்கும்.
2013 – 2015 ஒப்பந்தமும்
ஒன்றரை வருட போராட்டங்களும்
 
2013 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தின் ஆயட்காலம் 2015 மார்ச் 31 ஆம் திகதியுடன் காலாவதியானது.
ஒப்பந்தத்தை புதுப்பிப்பதற்குரிய பேச்சுகள் முன்கூட்டியே ஆரம்பமாகியிருந்தாலும், தேர்தல் நெருங்கியதால், வாக்குவேட்டை நடத்துவதற்காக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸால் ஆயிரம் ரூபா சம்பளம் அவசியமென்ற கோரிக்கை தேர்தல் குண்டாக வீசப்பட்டது.
அதன்பின்னர் ஏனைய தொழிற்சங்கங்களும் இத்தொகையை தூக்கிப்பிடித்ததாலும் – அரசியல் திணிக்கப்பட்டதாலும் கூட்டு ஒப்பந்தமென்பது கூத்து ஒப்பந்தமாக மாறியது. தொழிலாளர்களின் போராட்டங்களைகூட அரசியல் மயப்படுத்தி தொழிற்சங்கங்கள் குளிர்காய்ந்தன.
வரலாறுகாணாத வகையில் மலையகத்தில் எட்டுத்திக்கலும் வெடித்த போராட்டங்களுக்கு வடக்கிலும், கிழக்கிலும், தலைநகரிலும் ஏன்! புலம்பெயர் நாடுகளில்வாழும் தமிழர்கள் நேசக்கரம் நீட்டினர். சம்பளம் – சலுகைகளுக்கு அப்பால் மலையக மக்களின் அரசியல் உரிமைகளுக்கான கோஷங்களும் விண்ணதிர முழங்கின.
18 மாதங்களாக போராட்டங்கள் தொடர்ந்ததால் தொழிலாளர்களின் பொருளாதாரமும் ஆட்டம்காண தொடங்கியது. ஆரம்பத்தில் தொடர், அதன்பின்னர் சுழற்றி முறையென போராட்டவடிவங்கள் உருமாறியதாலும், தொழிலாளர்களின் வறுமையை பயன்படுத்திலும் ஏனோதானோவென ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
புதிதாக கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் 620 ரூபாயிலிருந்து தினசரி வேதனம் 730 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. வருகைக்கான கொடுப்பனவு, ஊக்குவிப்பு கொடுப்பனவு என வார்த்தை ஜாலங்கள் காண்பிக்கப்பட்டிருந்தாலும் சொற்பளவே சம்பள உணர்வே கிடைத்தது. 18 மாதங்களுக்குரிய நிலுவைச்சம்பளமும் வழங்கப்படவில்லை. அரசால் வழங்கப்பட்ட இடைக்கால கொடுப்பனவும் சம்பளத்திலிருந்து கழிக்கப்பட்டது. தேயிலை உற்பத்தி வீழ்ச்சி , உலக சந்தையில் தேயிலை விலை வீழ்ச்சி போன்ற காரணங்களை வழமைபோலவே கம்பனிகள் முன்வைத்தன.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *