மாவீரர் நினைவேந்தலின் பின் கட்டவிழும் அரச பயங்கரவாதம்! – சிவாஜிலிங்கம் குற்றச்சாட்டு

“தமிழீழ மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்தியமைக்காக வடமராட்சியில் அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அச்சத்துடன் வாழ்கிறார்கள்.”

– இவ்வாறு தெரிவித்தார் வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்.

மாவீரர் நாள் நினைவேந்தல் நடத்தியமை காரணமாக வடமராட்சியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் குறித்து மனித உரிமைகள் ஆணைக் குழுவின் யாழ்.அலுவலகத்தில் சந்திப்பை மேற்கொண்ட பின் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பருத்தித்துறை, சுப்பர்மடம் பகுதியில் கடந்த 27ஆம் திகதி மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு ஊர் மக்களால் ஒழுங்கமைப்பு செய்யப்பட்டது. இந்நிலையில், 26ஆம் திகதி மாலை வாள்கள், துப்பாக்கிகள் சகிதம் சிலர் அங்கு வந்து தம்மை இரகசியப் பொலிஸார் என அடையாளப்படுத்திக் கொண்டு மக்களைக் கடுமையாக அச்சுறுத்தியுள்ளனர். 4ஆம் மாடிக்கு விசாரணைக்கு கொண்டு செல்லப்படுவீர்கள் எனவும், தாக்குதல் நடத்துவோம் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

ஆனாலும் 27ஆம் திகதி மக்கள் மாவீரர்களுக்கு அஞ்சலிகளைச் செலுத்த முயன்றபோது அங்கே பொலிஸாரும், பொலிஸ் சீருடை அல்லாத சிவில் உடையில் வந்த சிலரும் மீண்டும் மக்களை மோசமாக அச்சுறுத்தியுள்ளதுடன், ஆயுதங்களை காண்பித்து மாவீரர்களுக்கான நினைவேந்தல் நடத்தப்படும் இடத்திற்கு செல்லக்கூடாது எனவும் விரட்டியுள்ளனர்.

இதனால் பின்னர் ஊருக்குள் உள்ள பொது மண்டபம் ஒன்றில் மக்கள் நினைவேந்தலை நடத்தியுள்ளார்கள்.
இதன் பின்னர் 28ஆம் திகதி அதிகாலை ஊரில் மாவீரர் நாள் நினைவேந்தலை முன்னின்று ஒழுங்கமைத்தவருடைய வீட்டுக்குள் நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள் சிங்களத்தில் சரமாரியாக பேசிக் கொண்டு வீட்டின் கதவை உதைந்து திறப்பதற்கு முயற்சித்துள்ளார்கள்.

எனினும், அது சாத்தியப்படாத நிலையில் கதவு, ஜன்னல்களை உடைத்து நொருக்கியுள்ளனர். பின்னர் அயலவர்கள் பொலிஸாருக்கு தகவல் கொடுத்த நிலையில் சுமார் 30 நிமிடங்கள் தாமதமாக பொலிஸார் சம்பவ இடத்துக்கு வந்திருந்தார்கள்.

ஆனால், தாக்குதல் நடத்தியவர்கள் அதற்குள் அங்கிருந்து சென்றுவிட்டார்கள். இந்தச் சம்பவம் இடம்பெற்றபோது அந்த வீட்டில் வயதான பெண் ஒருவரும், அவருடைய பேரக் குழந்தையும் அறை ஒன்றுக்குள் ஒழிந்திருந்துள்ளார்கள்.

இவ்வாறு பல்வேறு அச்சுறுத்தல்கள் அந்தப்பகுதி மக்களுக்கு தொடர்ச்சியாகக் கொடுக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பில் நான் சம்பவ இடத்திற்குச் சென்று பார்த்தபோது அங்கே மக்கள் மிகுந்த அச்சத்துடன் இருக்கின்றார்கள்.

அவர்களுடன் பேசியபோது, தங்கள் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் 31 பேர் மாவீரர்களாகியுள்ளார்கள். அவர்களுக்கான நினைவேந்தலை நடத்தியது தொடர்பாகக் கூறினார்கள். தாக்குதல் தொடர்பில் பொலிஸ் நிலையதில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளமை குறித்தும் கூறினார்கள்.

மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடு கொடுக்கலாம் என நான் கூறினேன். அதற்கு தாங்கள் வருவதாக அவர்கள் கூறியிருந்தார்கள். ஆனால், அவர்கள் அச்சம் காரணமாக வராத நிலையில் நான் நேற்றுமுன்தினம் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பொறுப்பதிகாரி கனகராஜைத் தொடர்புகொண்டு விடயங்களைத் தெளிவுபடுத்தியுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுங்கள் எனக் கோரிக்கை விடுத்திருக்கின்றேன்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *