ரணிலை பிரதமராக்க மைத்திரி தொடர்ந்தும் மறுப்பு ! மாரப்பன, ராஜித, சம்பிக்கவின் பெயர்கள் பரிந்துரை!

ஐக்கிய தேசியக்கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியிடம் ஆட்சியமைப்பதற்குரிய பெரும்பான்மைபலம் இருந்தாலும், பிரதமர் பதவிக்கு ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்கப்போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இதனால், அரசியல் களம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.

எனினும், ஐக்கிய தேசிய முன்னணியிலுள்ள வேறொரு உறுப்பினருக்கு பிரதம அமைச்சுப் பதவியை வழங்குவதற்கு ஜனாதிபதி பச்சைக்கொடி காட்டியுள்ளதால், முக்கிய உறுப்பினர்கள் சிலரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன.

திலக்மாரப்பன, ரஞ்சித் மத்தும பண்டார, ராஜித சேனாரட்ன, சம்பிக்க ரணவக்க ஆகியோரின் பெயர்களும் பட்டியலில் இடம்பிடித்துள்ளன. இதில் திலக்மாரப்பன , மஹிந்தவுக்கு மிகவும் நெருக்கமானவராகக் கருதப்படுகின்றார். மாரப்பனவின் தம்பியே, மஹிந்த குடும்பத்தின் நம்பிக்கையை வென்ற சட்டத்தரணியாக வலம்வருகிறார்.

எனவே, பிரதமர் பதவியை மாரப்பனவுக்கு வழங்குமாறு மஹிந்த தரப்பிலிருந்து ஆலோசனை முன்வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போதைய அரசியல் சூழ்நிலையில் பிரதமர் பதவியை ஏற்பதற்கு சஜித் பிரேமதாச மறுத்துள்ளார்.

அப்பதவியை கருவுக்கு வழங்கினால், பதவி ஆசையாலேயே அவர் பக்கச்சார்பாக செயற்பட்டார் என்ற விமர்சனங்கள் எழும். ஆகவேதான் நாடாளுமன்றம் கலைக்கப்படும்வரை , ரணிலை தவிர ஏயைன ஒருவரை பிரதமராக நியமிப்பதற்கு பேச்சுகள் நடத்தப்பட்டுவருகின்றன.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *