ஐ.தே.மு. அரசை ஆதரிக்க கூட்டமைப்பு முன்வைத்துள்ள நிபந்தனைகள் என்ன? – ரணிலை நேரில் சந்தித்துப் பட்டியலிட்டது சம்பந்தன் குழு

ஐக்கிய தேசிய முன்னணி அரசுக்கு ஆதரவு அளிக்கின்றோம் என்ற கடிதத்தை ஒப்பமிட்டு வழங்கிய இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதற்குப் பிரதியுபகாரமாகத் தாங்கள் முன்வைக்கும் நிபந்தனைகள் குறித்துப் பேச்சு நடத்துவதற்காக நேற்று வியாழக்கிழமை மாலை 4.30 மணியளவில் அலரி மாளிகையில் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்தனர்.

ஐக்கிய தேசிய முன்னணி அரசுக்கு ஆதரவு அளிப்பதற்குப் பிரதியுபகாரமாகத் தாங்கள் எதிர்பார்க்கும் விடயங்களைக் கூட்டமைப்பினர் ரணில் விக்கிரமசிங்கவுக்குப் பட்டியலிட்டனர். அவை குறித்து சாதகமாகத் தாம் பரிசீலிப்பார் என ரணில் விக்கிரமசிங்க பச்சைக் கொடி காட்டினார்.

கூட்டமைப்பினரின் எதிர்பார்ப்புகள், கோரிக்கைகள் குறித்துத் தொடர்ந்தும் பேசுவதற்கு ரணில் விக்கிரமசிங்க இணங்கினார்.

புதிய ஐக்கிய தேசிய முன்னணி அரசில் தாங்கள் இணைந்து கொள்ளாமல், வெளியில் இருந்தபடி அந்த அரசுக்கு ஆதரவு தந்தாலும், வடக்கு, கிழக்குத் தமிழர் தாயகப் பிரதேசத்தில் தங்கள் நேரடிப் பங்களிப்பு மற்றும் கண்காணிப்புடன்தான் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையும் இதன்போது கூட்டமைப்புத் தரப்பால் முன்வைக்கப்பட்டது.

இந்தச் சந்திப்பில் கூட்டமைப்பு எம்.பிக்களான சி.சிறிதரன், எஸ்.சிவமோகன் ஆகியோர் பங்கேற்கவில்லை. ஏனைய 12 எம்.பிக்களும் மேற்படி சந்திப்பில் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *