கொழும்பு அரசியலில் திடீர் திருப்பம்! ஜனாதிபதி – சபாநாயகர் நேரில் சந்தித்துப் பேச்சு!! – ஐ.தே.மு., கூட்டமைப்பு, ஜே.வி.பியுடன் கலந்துரையாடி நெருக்கடிக்குத் தீர்வு காண்பேன் என மைத்திரி உறுதி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கும் இடையில் இன்று மாலை முக்கிய சந்திப்பு இடம்பெற்றது.

மாலை 4.30 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

நாடாளுமன்றத்தில் இன்று காலை உரையாற்றிய அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு உடன் தீர்வு காண ஜனாதிபதியும் சபாநாயகரும் நேரில் பேச்சு நடத்த வேண்டும் என்று கோரியிருந்தார். அதற்கு உதவத் தான் தயார் என்றும் கூறியிருந்தார்.

அத்துடன், பெரும்பான்மைப் பலமுள்ளவர்களிடம் அதிகாரத்தைக் கையளிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

அதற்குப் பதிலளித்த சபாநாயகர், தனக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் எந்தப் பிரச்சினையும் இல்லை எனவும், சுமுகமான உறவுகள் இருக்கின்றன எனவும் கூறியதுடன், அவரைச் சந்தித்துப் பேசத் தயாராக இருப்பதாகவும் கூறியிருந்தார்.

இதன் பின்னணியிலேயே, இன்று மாலை ஜனாதிபதிக்கும் சபாநாயகருக்கும் இடையில் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

இந்தச் சந்திப்பில் முக்கிய திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன. இதனை உறுதிப்படுத்தும் வகையில் சபாநாயகர் அலுவலகமும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், “ஐக்கிய தேசிய முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) ஆகிய கட்சிகளை நாளை வெள்ளிக்கிழமை நான் சந்திப்பேன். அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு காண்பது பற்றிப் பேசுவேன்” என்று சபாநாயகரிடம் ஜனாதிபதி தெரிவித்துள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சபாநாயகர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை இந்தச் செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *