மஹிந்தவுக்கு அடிக்கு மேல் அடி! நான்காவது பிரேரணையும் நிறைவேற்றம்!! பிரதமர் செயலகத்துக்கான நிதி முடக்கம்!!! – 123 எம்.பிக்கள் ஆதரவாக வாக்களிப்பு

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நான்காவது பிரேரணையும் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்தவகையில், மஹிந்த ராஜபக்ஷவின் பிரதமர் செயலகத்துக்கான நிதி ஒதுக்கீட்டை இடைநிறுத்தம் பிரேரணை நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டது. பிரேரணைக்கு ஆதரவாக 123 பேர் வாக்களித்தனர். எதிராக ஒருவர்கூட வாக்களிக்கவில்லை. ஆளுங்கட்சியான மஹிந்த அணி சபை அமர்வை இன்றும் புறக்கணித்திருந்தது.

நாடாளுமன்ற அமர்வு இன்று காலை 10.30 மணியளவில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் ஆரம்பமானது. இதன்போது ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவினால் மஹிந்த ராஜபக்ஷவின் பிரதமர் செயலகத்துக்கான நிதி ஒதுக்கீட்டை இடைநிறுத்தம் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது. இந்தப் பிரேரணை மீது பிற்பகல் 12.10 மணி வரை விவாதம் நடத்தப்பட்டது. பிற்பகல் 12.20 மணியளவில் குறித்த பிரேரணை மீது இலத்திரனியல் முறைப்படி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதன்போது 123 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தனர். பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஜே.வி.பியின் 6 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஐ.தே.க. முன்வைத்த பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தனர். எதிராக எவரும் வாக்களிக்கவில்லை.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஆளுங்கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த எந்தவொரு உறுப்பினரும் இன்றைய சபை அமர்வில் பங்கேற்கவில்லை.

எனினும், ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து அரச தரப்புக்குத் தாவிய அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவும், ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி சுயாதீன உறுப்பினராகச் செயற்படும் அத்துரலிய ரத்தன தேரரும் இன்றைய நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்றனர். இவர்கள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

அதேவேளை, அரச தரப்புக்குத் தாவி அமைச்சுப் பதவியைப் பெற்றுக் கொண்டபின், மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சிக்குத் திரும்பி வந்த வசந்த சேனநாயக்க, பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தார்.

இதன்படி 123 வாக்குகளால் இந்தப் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது என சபாநாயகர் கருஜயசூரிய அவைக்கு அறிவித்தார்.

பிரேரணை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டதை அடுத்து, நாடாளுமன்றம் நாளை வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்றைய சபை அமர்வை வெளிநாட்டுத் தூதுவர்கள், இராஜதந்திரிகள் நேரில் பார்வையிட அனுமதியளிக்கப்பட்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *