07 ஆம் திகதிக்கு பிறகே அடுத்தக்கட்ட நகர்வு – அரசு அறிவிப்பு

” டிசம்பர் 07 ஆம் திகதிக்கு பின்னரே மைத்திரி, மஹிந்த கூட்டணியின் அடுத்த கட்ட அரசியல் நகர்வுகள் முன்னெடுக்கப்படும். அதுவரையில் ஏனைய விடயங்கள் குறித்து அலட்டிக்கொள்ளமாட்டோம்” என்று அமைச்சரவை இணைப்பேச்சாளரான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு இன்று பிற்பகல் ஒரு மணிக்கு அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்று கருத்து வெளியிடுகையிலேயே தயாசிறி மேற்கண்டவாறு கூறினார்.

” எதிர்வரும் 07 ஆம் திகதியே உயர்நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு வெளிவரவுள்ளது. ஜனாதிபதியின் முடிவு சரியென்பது உறுதிப்படுத்தப்படுமானால், பெரும்பான்மை குறித்தோ, நிதி அறிக்கைகள் சம்பந்தமாகவோ அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. நேரடியாக பொதுத்தேர்தலுக்கு சென்றுவிடலாம்.

தீர்ப்புக்காகவே நாமும் காத்திருக்கின்றோம். அது வெளியான பின்னரே தீர்ப்பின் பிரகாரம் அடுத்தக்கட்ட நகர்வுகள் முன்னெடுக்கப்படும்.

அதேவேளை, அரசமைப்பின் 19 ஆவது திருத்தத்தின்படி பிரதமரை நீக்கவும் அமைச்சரவையை நியமிக்கவும் ஜனாதிபதிக்கு அதிகாரம் உண்டு. பொறுமை எல்லை மீறியதால் தான் ரணிலுடன் வேலை செய்ய முடியாமல் ஜனாதிபதி விலகினார் .

கொழும்பு துறைமுகத்தின் ஒரு பகுதியை நாடொன்றுக்கு வழங்க முடியாதென ஜனாதிபதி சொன்னார். ஆனால் அந்த நாட்டுக்கு சென்ற ரணில் அதனை வழங்க உறுதியளித்திருந்தார். இப்படியான தவறுகள் நடந்தன.

பாராளுமன்றத்தில் சபாநாயகர் ஐக்கிய தேசியக் கட்சிக்கு சார்பாக செயற்படுகிறார். சபையின் இடது பக்கம் இருப்பவர்களே ஆளுங்கட்சியினர் என்று சபாநாயகர் நினைக்கிறார். அதனால் அவரை சபாநாயகராக நாங்கள் ஏற்க மறுக்கிறோம்” என்றார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *