முஸ்லிம்களின் வரலாற்றை பேணிப் பாதுகாக்க வேண்டும்!

முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழ்கின்ற இந்நாட்டில் ஒவ்வொரு மாவட்டம் மாவட்டமாக எமது வரலாறுகளை எழுதிப் பேணிப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும், கடமைப்பாடும் அனைவருக்கும் உள்ளது என முஸ்லிம் சமய, கலாச்சார பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துக்குப் பொறுப்பான நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

முஸ்லிம் சமய, கலாச்சார பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட தேசிய மீலாதுன் நபி விழா கடந்த திங்கட்கிழமை (26) கொழும்பு ஸாஹிராக் கல்லூரி கபூர் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தலைமை உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அமைச்சர் பைஸர் முஸ்தபா கலந்து சிறப்பித்ததோடு, நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் டீ.ஜீ.எம்.வீ. ஹப்புஆராச்சி, அமைச்சின் மேலதிக செயலாளர் எம்.சி. நபீல், முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அஷ்ஷேக் எம்.ஆர்.எம். மலிக், இலங்கைக்கான பாலஸ்தீன தூதுவர் ஸ{ஹைர் எம்.எச். தார் ஸைத் இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவராலயத்தின் முதன்நிலை செயலாளர் முஹம்மட்ட ஸாஹிட் ஸ{ஹைல் உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அவர் அங்கு மேலும் கூறியதாவது:-
முஸ்லிம் சமய, கலாச்சார பண்பாட்டலுவல்கள் திணைக்களம் சுமார் 35 வருடங்களாக தேசிய மீலாத் விழாவினை சிறப்பாக நடத்தி வருகின்றது. அதனை முன்னிட்டு பல்வேறுபட்ட சமூக நல பணிகளையும் முன்னெடுத்து வருகின்றது.
மீலாத் தினத்தை முன்னிட்டு அகில இலங்கை ரீதியில் மாணவர்களுக்கிடையில் நடத்தப்படுகின்ற கலை, கலாச்சார ரீதியான போட்டிகள் மூலம் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வழிமுறைகளை இன்றைய மாணவர்கள் மத்தியில் எடுத்துரைப்பதற்கு சந்தர்ப்பமாக அமைந்துள்ளது.
முஸ்லிம் சமய, கலாச்சார பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தேசிய மீலாத் விழாவினை நடத்துகின்ற பிரதேசத்தில் உள்ள பள்ளிவாசல்கள், அறபு மத்ரஸாக்களில் புனரமைப்பு, அபிவிருத்தி வேலைகளையும் முன்னெடுக்கின்றது. அத்தோடு, அப்பிரதேசம் தொடர்பான வரலாற்று நூல் ஒன்றினையும் எழுதி பாதுகாக்கின்றது.
முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழ்கின்ற நாட்டில் சமூகம் சார்ந்த வரலாற்றினை எழுதிப் பாதுகாக்க வேண்டும். இன்று முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழ்கின்ற மியன்மார் உள்ளிட்ட பல நாடுகளில் சமூகம் சார்ந்த வரலாறுகள் எழுதிப் பாதுகாக்கப்படவில்லை. இதன் காரணமாக அங்கு முஸ்லிம்களின் வரலாறுகள் மறைக்கப்பட்டு பல்வேறு சோதனைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.
எனவே, முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழ்கின்ற இந்நாட்டில் ஒவ்வொரு மாவட்டம் மாவட்டமாக எமது வரலாறுகளை எழுதிப் பேணிப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும், கடமைப்பாடும் எம் அனைவருக்கும் உள்ளது. அந்தவகையில், தேசிய மீலாத் விழாவினை முன்னிட்டு பல விதமான அம்சங்களை உள்ளடக்கி பல பணிகளை இத்திணைக்களம் முன்னெடுக்கின்றது.
பெரும்பான்மை பௌத்த மக்களைக் கொண்ட இலங்கையில், அரசாங்கம் முஸ்லிம்களை கௌரவிக்கும் வகையில் இத்தினத்தை அரச விடுமுறை தினமாக அறிவித்துள்ளது. அத்துடன், தேசிய மீலாத் விழாவினை முன்னிட்டு மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்திப் பணிகளுக்காக அமைச்சின் ஊடாக நிதி ஒதுக்கீடுகளையும் செய்து இவ்விழாவினை அரச அங்கீகாரத்துடன் சிறப்பிக்கவும் ஒத்துழைக்கின்றது.
இத்தகைய தேசிய நிகழ்வுகளின் மூலம் எம் சமூகத்தின் மத்தியில் மேலும் பலவித அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் கீழ் முஸ்லிம் சமய, கலாச்சார பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இணைக்கப்பட்டுள்ளது. எனவே, எனது பொறுப்பின் கீழ் இத்திணைக்களம் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கும் – சவால்களுக்கும் முகங்கொடுக்க கூடிய வகையில் மேலும் பலப்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கின்றேன்.
இத்திணைக்களத்துக்கு தேவையான ஆளணி வசதிகள், நிதி ஒதுக்கீடுகள், சட்ட ரீதியான அதிகாரங்கள் மேலும் வலுப்படுத்த வேண்டும். அதற்கு அரசாங்கமும், அரசியல் தலைமைகளும் ஒத்துழைப்பு வழங்குகின்ற போது முஸ்லிம் சமூகம் சார்ந்த நிறுவனங்கள், தஹ்வா அமைப்புக்கள், புத்திஜீவிகள், உலமாக்களின் பங்களிப்போடு இத்திணைக்களத்தை மேலும் ஆரோக்கியமாக செயற்படுத்த எம்மால் முடியும். எமது இலக்கினை வெற்றிகரமாக அடைந்து கொள்ளவதற்கு தேவையான வழிவகைகளை நாங்கள் முன்னெடுத்துள்ளோம்.
முஸ்லிம் சமய, கலாச்சார பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஹஜ் விவகாரம், பள்ளிவாசல்கள் புனரமைப்பு போன்ற விடயங்களோடு மாத்திரம் நின்றுவிடாமல் சமூகம் சார்ந்த சகல விடயங்களிலும் பங்களிப்பு செலுத்த வேண்டும்.
முஸ்லிம்கள் தொடர்பில் சிங்கள, தமிழ் சமூகங்கள் மத்தியில் தவறான அபிப்ராயங்கள் இருக்கின்றன. அவற்றை நீக்குவதற்கான பணிகளை நாங்கள் செய்ய வேண்டும். அதேபோன்று, எங்களுக்கான சட்டங்கள் மிகவும் பழைமை வாய்ந்தமையினால் மாற்றங்களை கொண்டுவர வேண்டும்.
வக்பு, ஹஜ் கடமை, விவாக – விவாகரத்து சட்டம் முதலான சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என பல்வேறுபட்ட கோரிக்கைகள் சமூகத்தினால் முன்வைக்கப்படுகின்றது. இவைகள் எமது பண்டைய மூதாதையர்களினால் மிகவும் போராடி எமது உரிமைகளை மீட்டெடுக்கும் வகையில் சலுகைகளை உள்ளடக்கியதாய் அமைத்துத் தந்த சட்டதிட்டங்கள். ஆனால், இன்றைய காலத்திற்கு ஏற்ப சமூகத்தின் தேவைக்கு ஏற்ற விதத்தில் ஒரு சில மாற்றங்களை கொண்டு வரவேண்டியுள்ளது.
எவ்வித மாற்றங்களைக் கொண்டு வருவதாக இருப்பினும், அல்லாஹ்வின் கட்டளையான அல்குர்ஆனுக்கும், எம்பெருமானார் நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகளை உள்ளடக்கிய சுன்னாவுக்கும் உட்பட்டதாக அமைய வேண்டும். மாறாக நவீன உலகின் தேவைக்கு ஏற்ப மார்க்கத்தில் சட்டங்களை மாற்றுகின்ற உரிமையோ, அதிகாரமோ எந்த வல்லரசுக்கோ, அரசாங்கத்திற்கோ, திணைக்களத்திற்கோ கிடையாது. இந்நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கவேண்டும்.
எமது நாட்டை பொறுத்தவரை அல் குர்ஆன், ஹதீஸ்களை கற்றுத்தேறிய உலமாக்கள், கதீப்கள், மௌலவிகள் ஆகியோருக்கு குறைவான கௌரவத்தையே வழங்குகின்றோம். அவர்களுக்கான தகுந்த சம்பள கொடுப்பனவுகள் வழங்கப்படுவதில்லை. அவர்கள் பொருளாதார பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றார்கள். இந்த நிலைமை மாற்றப்பட வேண்டும். அவர்களுக்கான அடிப்படை சம்பளமொன்று நிர்ணயிக்கப்பட வேண்டும். ஓய்வூதிய முறையொன்று உருவாக்கப்பட வேண்டும். அவர்களுக்கான தகுந்த பயிற்சி முஸ்லிம் சமய கலாச்சார பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் அரச அங்கீகார நற்சான்றிதழுடன் வழங்கப்படவேண்டும். இந்த சான்றிதழ் இருப்பவர்களையே அறபுக் கல்லூரிகளில் விரிவுரையாளர்களாக நியமிக்கவேண்டும். அனைத்து முஸ்லிம் அமைப்புக்களினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொதுவான அறபு பாடதிட்டமொன்றை அமுல்படுத்த வேண்டும். மேலும் மௌலவிமார்களுக்கு இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் பொதுவான பரீட்சையொன்றை வைத்து அதன் மூலம் சிறந்த மௌலவி, உலமாக்களை உருவாக்க எத்தணிக்கவேண்டும்.
இன்று எமது நாட்டில் போதைபொருள் பாவணை முஸ்லிம்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்த கலாசாரத்தை மாற்றவேண்டும். இது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வுகளை பள்ளிவாசல்கள் நடாத்தவேண்டும். கொழும்பில் முஸ்லிம்களின் கல்வி நிலைவீழ்ச்சியடைந்துள்ளது. நாம் ஆர்வம் குறைந்தவர்களாக இருக்கின்றோம். கொழும்பில் முஸ்லிம் மாணவர்களுக்கு பாடசாலைகளில் வாய்ப்புக்களை அதிகரிக்க வேண்டும். இல்லையேல் புதிய பாடசாலைகளை உருவாக்க வேண்டும்.
முஸ்லிம் சமூகம் எதிர்நோக்குகின்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு உள்நாட்டு வெளிநாட்டு உதவிகளுடன் தீர்வுகளைக் காணவேண்டும். முஸ்லிம் சமய கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஒரு சமூக நிலையமாக மாறவேண்டும். முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நிலையமாக மாற்றியமைக்கப்பட வேண்டும். –என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *