அட்மிரல் ரவீந்திர கைது! டிசம்பர் 5 வரை மறியல்!!

இலங்கையின் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரை எதிர்வரும் டிசம்பர் 5ஆம் திகதி வரை, விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

கொழும்பில் 11 தமிழர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கின் பிரதான சந்தேகநபருக்கு அடைக்கலம் கொடுத்து, வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்ல உதவினார் என்று அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு, குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு, கோட்டை நீதிவான் உத்தரவிட்டிருந்தபோதும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதனைத் தடுத்து வந்தார்.

நேற்று இரண்டாவது தடவையாக குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைக்காக அழைத்தபோதும், அவர் தனக்கு உத்தியோகபூர்வ அழைப்பாணை கிடைக்கவில்லை என்று கூறி, தட்டிக் கழித்திருந்தார்.

இந்தநிலையில், இன்று காலை நீதிமன்றத்தில் சரணடைந்த அவரிடம், நடத்திய விசாரணைகளை அடுத்து, பிற்பகல் 2.30 மணியளவில், சிவில் உடையில் நீதிமன்றத்துக்கு வருமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலையான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை கைதுசெய்ய உத்தரவிட்ட கோட்டை நீதிவான், எதிர்வரும் டிசம்பர் 5ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *