ரிசாட்டின் பாதுகாப்பு குறைப்பு – நாமல் குமார குறித்து உடன் விசாரணை அவசியம்!!

அரசியலமைப்புச் சட்டத்தையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்கும் நோக்கிலேயே தொடர்ந்தும் போராடி வருகின்றோமெனவும், இந்த இழுபறியை பாராளுமன்றத்தில் உரிய முறையில் தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கையை அவசரமாக ஜனாதிபதி மேற்கொள்ள வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (27) இடம்பெற்ற ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

பாராளுமன்றத்தில் சபாநாயகர் செயற்படும் முறை, அவரது தைரியம் துணிவு மற்றும் பாராளுமன்ற நடைமுறைகளையும் சம்பிரதாயங்களையும் பாதுகாக்கும் பாங்கு ஆகியவை தொடர்பில் இந்த உயரிய சபையில் அவருக்கு எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

பாராளுமன்றத்தில் மிகவும் அநாகரீகமாகவும் அதிகாரிகள், பொலிஸார் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது வீசப்பட்ட மிளகாய் தூள் கலந்த நீர் சம்பவம் மிகவும் வருந்தத்தக்கது. எனது பாராளுமன்ற பிரதிநிதித்துவக் காலமான சுமார் 18 வருட காலத்தில் நான் என்றுமே இவ்வாறான சம்பவங்களை கண்டதில்லை. கற்றவர்கள் கூட, இந்தப் பாராளுமன்ற உறுப்பினர்கள் கல்வி கற்றவர்களா என சிந்திக்கும் அளவுக்கு இந்த உயரிய சபையை பிரதிநித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் நடந்து கொண்டார்கள்.

இந்த சம்பவங்களை வைத்துப்பார்க்கும் போது பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஆகக் குறைந்தது பட்டதாரியாக இருக்க வேண்டுமென்ற சட்டம் கொண்டு வரப்பட வேண்டுமென நான் வலியுறுத்த விரும்புகின்றேன். இவர்கள் இந்த சபையில் நடந்து கொண்டதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு எந்தவிதமான பாரபட்சமுமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டுமென நான் கோருகின்றேன்.

பாராளுமன்ற உறுப்பினர்களாகிய எங்களுக்கு சபை அமர்வின் போது தேவைப்படும் சில உதவிகளை மேற்கொள்ளும் உத்தியோகத்தர்கள் கூட இந்த தாக்குதலின் காரணமாக பாதிக்கப்பட்டமை எனக்கு மன வருத்தம் தருகின்றது.

சபாநாயகராகிய நீங்கள் மிகவும் நேர்மையாகவும், உண்மையாகவும் பாரபட்சமின்றியும் கடந்த 14,15,16 ஆம் திகதிகளில் சபைக்குள் நடந்த ரகளைகளின் போது உங்களது கடமைகளைச் செய்திருக்கின்றீர்கள். முன் வைத்த காலை நீங்கள் பின் வைக்க வில்லை. உங்களை யாரெல்லாம் விமர்சிக்கிறார்களோ அவர்களின் மனச்சாட்சிக்கும் நடந்த உண்மைகள் தெரியும். உண்மைகள் ஒரு போதும் அழிந்ததும் இல்லை. தோற்றதும் இல்லை.

என்னைப் பொருத்தவரையில் நான் அகதி முகாமில் வாழ்ந்தவன். அகதி முகாமிலிருந்தே எம் பியாக தெரிவு செய்யப்பட்டு இந்த சபைக்கு வந்தவன். நேர்மையாக நான் பணியாற்றுகின்ற போதும் என்னையும் சிலர் மிகவும் மோசமாக விமர்சிக்கின்றனர். எனினும் நான் எடுத்த காலை ஒரு போதும் பின் வைத்தவனல்ல. அதனால் நான் தொடர்ந்தும் வெற்றிகளையே கண்டு வருகின்றேன்.

யுத்த காலத்திலே பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போது மக்களுக்கு பல தடைகளுக்கு மத்தியிலே பணியாற்றியவன். எனக்கு 18 வயதாக இருக்கும் போது எனது சமூகம் எந்த விதமான காரணமுமின்றி வெறுங்கைகளுடன் வெளியேற்றப்பட்ட போது நானும் அவர்களுடன் சேர்ந்து அகதியாக வந்தவன். 2009 ஆம் ஆண்டு யுத்த முடிவின் பின்னர் எமது சொந்தக் கிராமத்திற்கு எமது சமூகம் மீளத்திரும்பிய போது பல்வேறு சவால்களை சந்தித்ததை நான் இந்த இடத்தில் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.

பாராளுமன்றம் ஒரு மாத காலமாக சர்ச்சைக்கும், போராட்டங்களுக்கும் மத்தியிலேயே இழுபட்டுப் போயிருக்கின்றது. நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்து மிகவும் மோசமான வீழ்ச்சியை நோக்கி நாடு அதல பாதாளத்துக்கு சென்று கொண்டிருக்கின்றது. அலுவலங்களில் அன்றாட அலுவல்கள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறை இந்த ஒரு மாத காலத்துக்குள் படு பாதாள வீழ்ச்சிக்கு சென்றுள்ளது. மக்களின் மனங்களிலே ஏக்கமும் அங்கலாய்ப்புமே காணப்படுகின்றது. அடுத்த கனம் எது நடக்குமென்று புரியாதவர்களாக நாட்டு பிரஜைகள் வாழ்கின்றனர். எதுவுமே எதிர்வுகூற முடியாத நிலையிலே தான் இருக்கின்றது.

நாட்டு மக்கள் இந்த அரசாங்கத்திற்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் 5 வருட அங்கீகாரம் வழங்கினர். எனினும் மக்கள் ஆணை மீறப்பட்டு அரசியலமைப்புக்கு மாற்றமாக 3 ½ வருடத்தில் பாராளுமன்றத்தை கலைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போதும் நீதிமன்றத்தின் இடைக்கால தடை உத்தரவு காரணமாக அது மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளது. எனினும் அடுத்தடுத்த சட்ட முரணான நடவடிக்கைகளினால் பாராளுமன்ற செயற்பாடுகள் சீர்குழைந்தே செல்கின்றன. பாராளுமன்ற ஜனநாயக முறையில் ஏற்பட்டுள்ள இந்த சர்ச்சைகளுக்கு, நாட்டு மக்களின் வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்டு பாராளுமன்ற உறுப்பினர்களாகவுள்ள 225 பேரும் கூடி இந்த உயரிய சபையிலேயே முடிவு கட்ட முடியும். ஆனால் அந்த நடைமுறைக்கு மாற்றமாக பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத்தேர்தல் ஒன்றை நடத்தி மக்களிடம் மீண்டும் ஆணை பெற்று பிரதமரை தெரிவு செய்ய வேண்டுமெனக் கூறுவது மிகவும் சிறுபிள்ளைத்தனமான ஒன்று.

நாமல் குமார என்பவரின் கூற்றுக்கள் தொடர்பில் இன்று கதைகள் பின்னப்பட்டு, அரச நிர்வாகத்துடன் அதனைத் தொடர்புபடுத்தி சில விடயங்கள் இன்று பேசப்பட்டு வருகின்றன. ஜனாதிபதியையும் முன்னாள் பாதுகாப்பு செயலாளரையும் கொலை செய்ய சதி முயற்சிகள் இடம்பெற்றதாக கூறும் நாமல் குமாரவின் வாக்கு மூலம் தொடர்பில் ஒரு பெரிய பிரளயமே கிளப்பப்பட்டு அது தற்போது பூதாகரமாக உருவெடுத்துள்ளது. எனினும் அதே நாமல் குமாரவின் குரல் பதிவில் என்னையும் கொலை செய்ய சதி இடம்பெற்றதாக அவர் கூறியுள்ள போதும் பொலிஸ் மா அதிபரோ பொலிஸ் திணைக்களமோ அதை இருட்டடிப்பு செய்துள்ள துர்ப்பாக்கியத்தை இந்த சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்டுவது பொருத்தமாகும்.

மட்டக்களப்பு, அம்பாறையில் வைத்து என்னைக் கொலை செய்ய சதி செய்யப்பட்டதாக நாமல் குமார தெரிவித்ததன் பின்னர் எமது கட்சியின் தவிசாளர் உட்பட முக்கியஸ்தர்கள் பொலிஸ் திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ள போதும் இது வரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை. மாறாக எனது பாதுகாப்புக்கள் இல்லாமலாக்கப்பட்டு ஆக இரண்டே இரண்டு பொலிசார் மாத்திரமே எனது மெய்ப்பாதுகாப்புக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இரகசிய பொலிஸ் திணைக்களப் பணிப்பாளர் எங்களது முறைப்பாட்டுக்கு அப்பால் என்னை நாமல் குமார விடயம் தொடர்பில் வாய் மூல வாக்குமூலம் அளிக்குமாறு அழைத்தமை கண்டு நான் வியப்படைகின்றேன். எனவே எனது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும்  நாமல் குமாரவின் விடயத்தில் விஷேட விசாரணைகளை மேற்கொண்டு உண்மை நிலைகளை வெளிப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் இந்த உயர் சபையிலே கோரி நிற்கின்றேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *