தாயகமெங்கும் இன்று தமிழீழ மாவீரர் நாள்! – மாலை 6.05 இற்கு துயிலும் இல்லங்களில் சுடரேற்றல்

தமிழர்களின் உரிமைக்காக – தமிழீழ இலட்சியத்துக்காக தமது இறுதி மூச்சுவரைப் போராடி – களமாடி தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய வீரமறவர்களான மாவீரர்களுக்குத் தமிழினம் திரண்டு அஞ்சலி செலுத்தும் ‘தமிழீழ மாவீரர் நாள்’ இன்றாகும்.

இன்று மாலை 6.05 மணிக்குத் தாயகமெங்கிலும் புலம்பெயர் தேசங்களிலும் சுடரேற்றப்பட்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படும்.

இம்முறை நாட்டில் தீவிர அரசியல் குழப்ப நிலை ஏற்பட்டுள்ள நிலையிலும் இன்று மாவீரர் நாள் நிகழ்வுகள் தாயகமெங்கும் உணர்வெழுச்சியுடன் இடம்பெறவுள்ளன.

மாவீரர் நாளை எழுச்சியுடன் அனுஷ்டிப்பதற்காக மாவீரர் துயிலும் இல்லங்கள் சீரமைக்கப்பட்டு அஞ்சலி நிகழ்வுகளுக்குத் தயார்ப்படுத்தப்பட்டுள்ளன.

போர் நிறைவடைந்த பின்னர் தமிழர் தாயகத்தின் மாவீரர் துயிலும் இல்லங்கள் பலவற்றை இராணுவத்தினர் தம் வசப்படுத்தி அவற்றில் முகாம்களை அமைத்தனர். மேலும் சில துயிலும் இல்லங்கள் காடுகளாலும் பற்றைகளாலும் சூழ்ந்து கிடந்தன. அவை புனரமைக்கப்பட்டு கடந்த ஆண்டு மாவீரர் நாள் நிகழ்வுகள் இடம்பெற்றன. அதேபோன்று இம்முறையும் நடைபெறவுள்ளன.

துயிலும் இல்லங்களில் மாவீரர் தினத்துக்கான ஏற்பாடுகள் அனைத்தும் நேற்றைய தினமே பூர்த்தியாகியுள்ளன. துயிலும் இல்லங்களைச் சூழச் சிவப்பு மஞ்சள் கொடிகள் கட்டப்பட்டு நடுவில் கொடிக்கம்பம் நடப்பட்டுள்ளது. இன்று மாலை அங்கு நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

மாவீரர் துயிலும் இல்லங்களில் ஒழுங்கமைக்கப்பட்ட அஞ்சலி நிகழ்வுகளில் சரியாக மாலை 6.02 மணிக்கு மணி ஒலி எழுப்பப்பட்டு மாலை 6.05 மணிக்கு ஈகச் சுடரேற்றல் இடம்பெறும். இதன்போது மாவீரர் நாள் பாடல்களும் ஒலிக்கவிடப்படவுள்ளதாக மாவீரர் தின ஒழுங்கமைப்பாளர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, புலம்பெயர் தேசங்களிலும் இன்று மாவீரர் தின நிகழ்வுகளை எழுச்சியுடன் அனுஷ்டிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *