ரூ. 1000 இல்லையேல் மஹிந்தவை கைவிடுவோம் – தொண்டா எச்சரிக்கை!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு விடயத்தில் அரசாங்கம் உடனடியாக தலையிடாவிட்டால், அரசுக்கான ஆதரவு வாபஸ் பெறப்படும் என்றும், ஆயிரம் ரூபா என்ற இலக்கை அடையும்வரை தான் பின்வாங்கப்போவதில்லை என்றும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரான அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் சூளுரைத்தார்.

மலையகமெங்கும் இன்று மனித சங்கிலி போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை தொடர்பில்  ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பு  கொட்டகலை தொண்டமான் தொழிற்பயிற்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது கருத்து வெளியிட்ட தொண்டமான் மேலும் கூறியவை வருமாறு,

ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு வேண்டி கம்பனிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலும், அரசாங்கத்திற்கு மக்களின் பலத்தை நிரூபிக்கும் வகையிலும் மத்திய, ஊவா ஆகிய மாகாணத்தில் உள்ள மாவட்டங்களிலும், களுத்துறை, இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களில் 26.11.2018 அன்று காலை 8 மணி முதல் மதியம் ஒரு மணி வரை மனித சங்கிலி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த மனித சங்கிலி போராட்டத்திற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸோ அல்லது ஏனையவர்களே உரிமை கோர முடியாது. இது மக்களால் முன்னெடுக்கப்பட்ட ஒரு போராட்டமாகும்.

26.11.2018 அன்றைய போராட்டம் மிக சிறப்பாகவும், அமைதியாகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டமை பெருமைக்குரிய விடயமாகும். இதில் பங்கு கொண்ட தொழிலாளர்கள் மற்றும் இதற்கு ஆதரவாக செயல்பட்ட வர்த்தக நிலைய உரிமையாளர்கள் என பலருக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.

தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்று நாட்டின் பல பாகங்களிலும், ஆசிரியர்கள், பல்கலைகழக மாணவர்கள், இளைஞர்கள் என பலரும் போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர்.ஆயிரம் ரூபாய் அடிப்படை என்பது தோட்ட தொழிலாளர்களுக்கு இன்று அவசியமான ஒன்றாகும்.

கட்சி, இன, மத, மொழி வேறுபாடுகள் அற்றவகையில் அணைவரும் இதனை ஏற்றுக்கொண்டு போராட்டங்களை நடத்தி வருகின்றார்கள். அதேநேரத்தில் கம்பனிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலும், அரசுக்கு மக்களின் பலத்தை உணர்த்தும் வகையிலும் இந்த போராட்டம் இன்று அமைந்துள்ளது.

போராட்டம் ஆரம்பமே தவிர முடிவல்ல. சம்பளம் தொடர்பில் ஓர் இரு நாட்களில் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது. அதன்பின் ஏனைய முடிவுகளை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எடுக்கும்.

ஆயிரம் ரூபா சம்பள விடயத்தில் அரசுக்கு வழங்கும் ஆதரவிலிருந்து விலகவும் தயார். ஆனால் அவ்வாறு விலகினால் இன்றைய அரசியல் சூழ்நிலையில் யாரிடம் சென்று பேசுவது? ஆகையினால் அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு எடுக்க இ.தொ.கா தயாராகவுள்ளது. ஆயிரம் ரூபாவிலிருந்து பின்வாங்கி செல்லாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

க. கிசாந்தன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *