அரசியல் நெருக்கடி தீவிரமடைவதை அடுத்து நாடு முழுதும் பொலிஸ் முழு உஷார் நிலையில்!

மஹிந்த – ரணில் அணிகள் எதிர்ப்புப் பேரணிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளதால், நாடெங்கும் உள்ள பொலிஸாரை முழுமையான விழிப்பு நிலையில் இருக்குமாறு பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர உத்தரவிட்டுள்ளார்.

அனைத்து பொலிஸ் நிலையங்களினதும் பொறுப்பதிகாரிகளுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எல்லா பொலிஸ் நிலையங்களும், எந்த அவசர சூழ்நிலையையும் சமாளிக்கக் கூடிய வகையில், அம்புலன்ஸ் வாகனங்கள், தீயணைப்பு வாகனங்களுடன், அவசரநிலையை எதிர்கொள்ளத் தயாராக இருக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது என பொலிஸ் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

பதவி நீக்கப்பட்ட அரச தரப்புக்கும், புதிய அரச தரப்புக்கும் இடையில் மோதல்கள் ஏற்படலாம் என்பதாலேயே இந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மீண்டும் ஜனநாயகத்தை நிலை நிறுத்தக் கோரி, ஐக்கிய தேசியக் கட்சி முக்கியமான நகரங்களில் பேரணிகள், கூட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளது.

நேற்றுமுன்தினம் சனிக்கிழமை கண்டியில் ஒரு பாரிய கூட்டத்தை நடத்திய ஐ.தே.க. மேலும் பல நகரங்களில் இத்தகைய பேரணிகளை நடத்தவுள்ளது.

அத்துடன், கொழும்பில் இருந்து கதிர்காமத்துக்கும், கண்டிக்கும் பாரிய வாகனப் பேரணிகளை நடத்தவும் ஒழுங்குகள் செய்யப்பட்டு வருகின்றன.

அதேவேளை, மஹிந்த ராஜபக்ஷ தரப்பும், இவ்வாரம், பல்வேறு இடங்களில் கூட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ளார் என்று அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

அரசியல் நெருக்கடிகள் தீவிரமடைந்துள்ள இந்தச் சூழலிலேயே,ஏட்டிக்குப் போட்டியான பேரணிகள், கூட்டங்களை நடத்தும்போது, இருதரப்புகளும் மோதிக் கொள்ளலாம் என்பதால், பொலிஸார் உச்ச விழிப்பு நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *