அரசியல் பழிவாங்கலுக்காக அரசமைப்பை ஆயுதமாக்காதீர்! ஜனாதிபதிக்கு ஐ.தே.க. பதிலடி!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது தனிதப்பட்ட குரோதங்களை தீர்ப்பதற்காக அரசியலமைப்பைப் பயன்படுத்தக்கூடாது என்று ஐக்கிய தேசியக்கட்சி பதிலடி கொடுத்துள்ளது.

சர்வதேச ஊடகங்களின், செய்தியாளர்களை நேற்று சந்தித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐ.தே.க.மீதும் அதன் தலைவருக்கு எதிராகவும் சரமாரியாக விமர்சனங்களை முன்வைத்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஐ.தே.கவின் தவிசாளர் கபீர் ஹாசீமால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

”  ஐ.தே.க. தலைமையிலான ஆட்சியில் ஊழல், மோசடிகள் இடம்பெற்றன என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.  தேசிய அரசினதும் அதன்  அமைச்சரவையினதும் தலைவர் என்பதால் கடந்த மூன்றரை வருடங்களாக இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மோசடி தொடர்பில் ஜனாதிபதியும் சம பொறுப்பை ஏற்கவேண்டும்.

ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக ஜனாதிபதி ஆணைக் குழுவொன்றை நியமிக்கப்படும் என்ற உங்கள் அறிவிப்பை வரவேற்கின்றோம். ஆனால், அந்த குழுவானது ஜனாதிபதி தொடர்பிலும் விசாரணை நடத்த வேண்டும்.

ரணில் விக்ரமசிங்கவிற்கு பாராளுமன்றத்தின் பெரும்பான்மை கிடைத்தாலும் வாழ்நாளில் மீண்டும் ஒருமுறை அவருக்கு பிரதமர் பதவியை வழங்கப்போவதில்லை என்ற ஜனாதிபதியின் கூற்றானது பாராளுமன்ற ஜனநாயகத்தை மீறியுள்ளது.

ஜனாதிபதி அரசியலமைப்பிலுள்ள ஏற்பாடுகளுக்கு அமைய செயற்பட வேண்டும் . மாறாக தனது தனிதப்பட்ட குரோதங்களை தீர்ப்பதற்காக அரசியலமைப்பைப் பயன்படுத்தக்கூடாது .” என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *