தடைகளைத் தகர்த்து மாவீரர்களை தமிழ் மக்கள் நினைவுகூருவார்கள்! – சம்பந்தன் நம்பிக்கை

“கடந்த 2009ஆம் ஆண்டு தொடக்கம் 2015ஆம் ஆண்டு வரையான காலப் பகுதிகளில், ஆட்சியாளர்களால் பல்வேறு அழுத்தங்கள் – நெருக்குதல்கள் – அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டபோதும் அத்தனை தடைகளையும் தகர்த்தெறிந்து தமிழ் மக்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மாவீரர் நாளை உணர்வெழுச்சியுடன் கடைப்பிடித்தார்கள். இந்த ஆண்டும் எத்தகைய தடைகள் வந்தாலும் அதை உடைத்தெறிந்து மாவீரர் நாளை மக்கள் நினைவுகூருவார்கள்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

தமிழ்த் தேசத்தின் விடிவுக்காக – தமிழ் மக்களின் உரிமைக்காக தமது இன்னுயிர்களை உவர்ந்தளித்து – வீரச்சாவை அணைத்துக் கொண்ட வீரமறவர்களை – மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர் வாரம் தமிழர் தாயகம் எங்கும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. இதனைத் தடுக்கும் நோக்குடன் கோப்பாய் பொலிஸாரால், கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்துக்கு முன்பாக உள்ள காணியில் மாவீரர் நாள் நினைவுகளைக் கடைப்பிடிப்பதை தடை செய்யக் கோரி வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மாவீரர் நாள் நினைவேந்தலை நடத்துவதற்கு நீதிமன்றம் தடை விதிக்கவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளின் சின்னங்கள், கொடிகளைப் பயன்படுத்துவதற்கு தடை விதித்திருந்தது.

இவ்வாறானதொரு நிலையில், அரச தகவல் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று விசேட ஊடக அறிக்கை வெளியிடப்பட்டது. “மாவீரர் நினைவு தினக் கொண்டாட்டங்கள் தொடர்பாக எந்தச் சந்தர்ப்பத்திலும் அரசு அனுமதி வழங்கவில்லை. அவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று உணரும் வகையில் மேற்கொள்ளப்படும் பரப்புரைகளில் எவ்வித உண்மையும் இல்லை என்பதையும் அரசு வலியுறுத்துகின்றது” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனிடம் கேட்டபோது,

“நாங்கள் எங்கள் உறவுகளை நினைவுகூருவோம். 2009ஆம் ஆண்டிலிருந்து 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் வரையில், மாவீரர்களை நினைவுகூருவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. பல்வேறு தடைகளும் ஏற்படுத்தப்பட்டன. தமிழ் மக்களும், பல்கலைக்கழக மாணவர்களும் அந்தத் தடைகளைத் தகர்த்து மாவீரர்நாளை நினைவுகூர்ந்தனர்.

ஆட்சி மாற்றத்தின் பின்னர் கடந்த இரண்டு ஆண்டுகளும், மாவீரர் நாள் சுதந்திரமாகக் கடைப்பிடிக்கப்பட்டது. மாவீரர் நாளுக்கு தடை ஏற்படுத்தப்படுமாக இருந்தால், தமிழ் மக்கள் அதனைத் தகர்த்தெறிந்து உணர்வுபூர்வமாகக் கடைப்பிடிப்பார்கள்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *