பொதுத் தேர்தலுக்கு இணங்கினால் ஐ.தே.கவுடன் சேர்ந்து காபந்து அரசு! – இறங்கி வருகின்றது மஹிந்த தரப்பு
நாடாளுமன்றத் தேர்தலுக்கு இணங்கினால் ஐக்கிய தேசியக் கட்சியுடன் காபந்து அரசு ஒன்றை அமைக்கத் தயார் என்று அரசு அறிவித்துள்ளது.
மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஐக்கிய தேசியக் கட்சியைப் பொறுத்தவரை அது நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாரில்லை. இந்த நிலையில் அந்தக் கட்சியைக் கூட்டாட்சி ஒன்றை அமைக்க வருமாறு அழைப்பு விடுக்கின்றோம். ஏனைய கட்சிகளும் இந்தக் காபந்து அரசில் பங்கேற்க முடியும். இந்தக் காபந்து அரசின் கீழ் நாடாளுமன்றத் தேர்தல் ஒன்றுக்குச் செல்ல முடியும்.
இந்தக் காபந்து அரசில் ஐக்கிய தேசியக் கட்சியோ அல்லது ஏனைய கட்சிகளோ பிரதமர் ஒருவரை நியமிக்க முடியும்.
எனினும், ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராக்க ஜனாதிபதி விருப்பம் கொண்டிருக்காமையால் வேறு ஒருவரை ஐ.தே.க. பரிந்துரை செய்ய முடியும்” – என்றார்.