மைத்திரி – மஹிந்த கூட்டுக்கு விரைவில் சமாதி கட்டுவோம்! – கண்டியில் ரணில் சூளுரை

“நாடாளுமன்ற அமர்வுகளை புறக்கணித்த மஹிந்த அணியினர் மீண்டும் சபைக்குள் வரக்கூடாது. அத்துடன், ராஜபக்ஷ படையணிக்கு எதிரான போரை முடிப்பதற்கு சகலரும் ஒன்றிணைய வேண்டும்.”

– இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அறைகூவல் விடுத்தார்.

கண்டியில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஐ.தே.கவின் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை அடுத்து கண்டி மத்திய சந்தை முன்பாக இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு சூளுரைத்தார்.

இந்தக் கூட்டத்தில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் ஜனாதிபதித் தேர்தலின்போது மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களிடம், ஆட்சியைக் கையளிப்பதற்கு எடுக்கப்பட்ட முடியானது அநீதியானதாகும். இதற்கு எதிராக நாம் அனைவரும் போராடவேண்டும். ஜனநாயகத்தைப் பாதுகாக்கவேண்டும்.

நாடாளுமன்றத்தில் மைத்திரி – மஹிந்த கூட்டணிக்குப் பெரும்பான்மை இல்லை. வெள்ளியன்று நடைபெற்ற வாக்கெடுப்பில் அது உறுதியானது. நாடாளுமன்றத்துக்குரிய கௌரவத்தைப் பாதுகாப்பதற்கு சபாநாயகர் பாடுபடுகின்றார். ஆனால், செங்கோலை உடைத்து, சபாநாயகர் ஆசனத்தை உடைக்க மஹிந்தவின் சகாக்கள் முற்பட்டனர்.

புனித வேத நூல்களை தூக்கி எறிந்தார்கள். மிளகாய்த்தூளை முகத்தில் வீசினார்கள். நாடாளுமன்றினுள் பிரச்சினை தீர்க்கும் முறை இது வென்றால் நாடாளுமன்றுக்கு வெளியெ எப்படியான அணுகுமுறை இருக்கும் என்பது தெளிவாகும்.

எனவே, குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க முயற்சிக்கும் மஹிந்த படையணியை நாம் ஓரணியில் நின்று விரைவில் தோற்கடிக்கவேண்டும்” – என்றார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *