போலி அரசின் முகத்திரையை சபையில் கிழித்தெறிந்த திலகர்!

அரசியல் நெருக்கடியால் நாட்டின் பொருளாதாரத்துக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்தினால் சபையில் இன்று வெள்ளிக்கிழமை கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நுவரலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவையும், அவர் தலைமையிலான அமைச்சரவையையும் கடுமையாகச் சாடினார்.

மஹிந்த ராஜபக்ஷவை போலிப் பிரதமர் எனவும், அவர் தலைமையிலான அமைச்சரவையை போலி அமைச்சரவை எனவும் அவர் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கடந்த மாதம் 26 ஆம்திகதியில் இருந்து தனது நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜனாதிபதி செய்த அரசமைப்பு சூழ்ச்சியானால் நாங்கள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களாகி, அதற்காக நீதி கோரி நீதிமன்றம் சென்று இப்போது மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக வந்துள்ளோம். ஆனாலும் அத்தகைய சூழ்ச்சியின் பின்னர் இந்த உயரிய சபையில் இன்று அரசு எனக் கூறிக்கொள்வோரின் நடவடிக்கைகள் புதுமையாக இருக்கின்றன.

கடந்த 14ஆம் திகதி நாடாளுமன்றக் கூட்டத் தொடர் மீண்டும் ஆரம்பித்தபோது ஜனாதிபதி சம்பிரதாயபூர்வமாக ஆற்றவேண்டிய உரையை ஆற்றாத நிலையிலேயே நாங்கள் நாடாளுமன்ற நிலையியல் கட்டளைகளைத் தற்காலிகமாக ஒத்திவைத்து நாடாளுமன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. அன்று முதல் மூன்று நாட்களாகத் தொடர்ந்து நாங்கள் போலி அரசுக்கு எதிராகவும் போலிப் பிரதமருக்கு எதிராகவும் நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிறைவேற்றினோம்.

பொதுவாக அரசுதான் சட்டமூலங்களை முன்வைக்க எதிர்க்கட்சிகள் அதனை விவாதித்து வாக்கெடுப்பு கோருவார்கள். ஆனால், ஆளும் தரப்பு எனச் சொல்லிக்கொள்வோர் தாங்கள் நாட்டில் எந்தத் தேர்தலுக்கும் தயார் எனச் சொல்லிக் கொண்டாலும் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு என்றவுடன் கூச்சல், குழப்பத்தை ஏற்படுத்தி அராஜகமாக நடந்துகொண்டார்கள். எப்படியாயினும் நாங்கள் நாடாளுமன்றில் எமது பிரேரணைகளை நிறைவேற்றினோம்.

இன்று நிலையியல் தெரிவுக்குழு உறுப்பினர்களை உள்ளடக்கிய சபாநாயகரின் பெயர்ப்பட்டியல் வாக்கெடுப்புக்கு வந்தபோது இந்தப் போலி அரசின் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் புறமுதுகு காட்டி ஓடியுள்ளார்கள். நாங்கள் 121 உறுப்பினர்கள் இலத்திரனியல் முறையில் வாக்கெடுப்பு நடத்தி எமது பெரும்பான்மையை நிரூபித்துள்ளோம்.

தமிழ்த் திரைப்படத்தில் சில நேரங்களில் சீருடை அணிந்து வரும் சிரிப்பு பொலிஸ் போல இப்போது அமைச்சர்கள் எனச் சொல்லில் கொள்வோர் சிரிப்பு அமைச்சர்களாகவே உள்ளனர். கடந்த மூன்றாண்டு காலத்தில் நாடாளுமன்றத்துக்கு வருகை தந்தவர்களில் கடைசியில் வந்தவருக்கு முதலாவது ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு முதலாவதாக அமர்ந்திருப்பவரே சிரிப்பு அமைச்சருக்கு உதாரணம். இவர்தான் கடந்த 26 ஆம் திகதி தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் கிடைக்காது போனால் தான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டு விலகுவேன் எனச் சொன்னவர். சூழ்ச்சி மூலம் ஆட்சி மாறியவுடன் அமைச்சுப் பதவியைப் பெற்றுக்கொண்டவர் இவர்.

தாங்கள் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக இருந்தால் ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் பெற்றுக் கொடுப்போம் எனச் சொன்னார்கள். அவர்களது போலிப் பிரதமர் ஆற்றிய பொய்யுரையில் தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பளக் கோரிக்கை நியாயமானது எனக் கூறியதுடன் ஏதோ எல்லாத் தொழிலாளர்களுக்கும் அதனை வாங்கிக் கொடுத்தவர்கள் போல நோர்வூட் நகரில் கூடி கூச்சல் இட்டார்கள்.

ஆனால், தோட்டத் முதலாளி மார்ச் சம்மேளன பேச்சாளர் ரொஷான் இராஜதுரை, “600 ரூபாவுக்கு மேல் அடிப்படைச் சம்பளம் வழங்க முடியாது. 1000 ரூபா அடிப்படை சம்பளத்தை அமைச்சர் சொன்னாரே தவிர நான் சொல்லவில்லை” என்று கைவிரித்த்துள்ளார். அத்துடன் அவர்கள் இப்போது போலித் திட்டம் ஒன்றைத் தயாரிக்கின்றார்கள்.

இலங்கை தேயிலை சபையில் சேமிப்பாக உள்ள தொகையை கம்பனிகளுக்குத் தற்காலிக கடனாகப் பெற்றுக் கொடுத்து அதனூடாக 600 ரூபா அடிப்படைச் சம்பளத்தை 700 ரூபாவாக ஆக்குவதன் மூலம் 1000 ரூபா மொத்த சம்பளத்தை பெற்றுக் கொடுத்து தாங்கள் ஆயிரம் ரூபா சம்பளம் வாங்கிக் கொடுத்து விட்டதாக கணக்குக் காட்டுவதே இவர்களது திட்டம்.

அதேநேரம் தேயிலைக் கொழுந்து அதிகம் கிடைக்கும் காலத்தில் தொழிலாளர்களிடம் அதனை அறவிட்டு மீளவும் கம்பனிகள் தேயிலை சபைக்கு திரும்பச் செலுத்த வேண்டும். இதனால், பாதிக்கப்படப் போவது தொழிலாளர்களே. எனவே, இந்தத் திட்டத்தை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

அத்துடன், தேயிலை சபை சேமிப்பு நிதி என்பது பொது நிதி. இதனை போலி அமைச்சரவையினரால் எடுப்பதையும் அனுமதிக்க முடியாது. இந்த உயரிய சபையில் இந்த முறைமைக்கு எதிர்ப்பைத் தெரிவிப்பதுடன் அடிப்படைச் சம்பளம் ஆயிரம் பெற்றுக்கொடுக்காவிடின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவேன் என வாக்குறுதி அளித்தவர்கள் அதனைச் செய்ய வேண்டும். போலியான இந்த அரசுக்கு எதிராகக் கொண்டுவரப்படும் எல்லாப் பிரேரணைகளுக்கும் எமது ஆதரவையும் தெரிவிக்கத் தயாராகவே உள்ளோம்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *