ஜனாதிபதித் தேர்தலை முதலில் நடத்துங்கள் – மைத்திரிக்கு மனோ சவால்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனவரியில் ஜனாதிபதி தேர்தலை நடத்தி புதிய மக்கள் ஆணையை தேடிப்பெற வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.

அலரி மாளிகை வளாகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

நாம் பொது தேர்தலுக்கு தயாராக இருக்கிறோம். ஆனால், அது நியாயமாக நடைபெற வேண்டும். இவர்களின் காபந்து அரசு பலத்தின் கீழ் அது நடைபெற முடியாது. அதற்கு ஒரு கால அட்டவணை உள்ளது. பொதுவாக எல்லா தேர்தலுக்கும், தேர்தல் கால அட்டவணைகள் உள்ளன. அதன்படி பார்த்தால், பொது தேர்தலை விட, ஜனாதிபதி தேர்தலுக்குதான் இன்று இடம் இருக்கிறது. ஆகவே முடியுமானால், அவசியமானால், ஜனாதிபதி தேர்தலுக்கு போங்கள்.

அரசியலமைப்பு தெளிவாக இருக்கிறது. ஜனாதிபதி அவர்களே, உங்களுக்கு தேர்தலுக்கு போக முடியும். உங்கள் செயற்பாடுகள் பற்றி உங்களுக்கு அந்தளவு நம்பிக்கை இருந்தால், மக்களிடம் போய் புதிய மக்கள் ஆணையை கோருங்கள். உங்கள் செயன்முறைகள் திருப்தியானவைகளாக  இருந்தால், மக்கள் உங்களுக்கு வாக்கு அளிக்கட்டும். அதை நாம் ஏற்றுக்கொள்வோம்.

நீங்கள் இன்று இருக்கும் இடத்தில் உள்ள தலைமை ஆசிரியரின் மகன், தமது கட்சியிலே உங்களுக்கு அடுத்த ஜனாதிபதி தேர்தலில் நியமனம் தருவதாக இருந்தால், அது உங்கள் நடத்தையிலேயே தங்கி உள்ளது என்று கூறுகிறார். பாடசாலை வகுப்புகளில் நமது மாணவர்களின்  நடத்தை புத்தகம் இருப்பதை போன்று, நீங்களும் உங்கள் நடத்தையால், அதிக புள்ளிகள் பெற்றால்தான் உங்களால் அவர்களது டிக்கட்டை வாங்கி போட்டியிட முடியும். மிளகாய் நிறமான சிகப்பு நிறத்துடன் கூடிய நட்ச்சத்திர புள்ளிகளை நீங்கள் பெற்றால்தான், உங்களுக்கு நியமனம் தருவதாக அவர்கள் கூறுகிறார்கள்.

உங்களுக்கு ஏன் இந்த சிரமம்? அடுத்த வருட, ஆரம்பத்தில் நீங்களே போட்டியிட வழி வகுக்கும் ஜனாதிபதி தேர்தல் வருகிறது. உங்களால் முன்கூட்டியே ஜனாதிபதி தேர்தலை நடத்துவிக்க முடியும்.  நாங்களும் போட்டியிடுவோம். உங்களுக்கு நாம் உதவியும் செய்யலாம். எமது தரப்பில் யார் போட்டியிடுவார் என நாம் இப்போது சொல்ல முடியாது. எம் மனதில் இரண்டொருவர் இருக்கிறார்கள்.- என்றார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *