மஹிந்த – ரணிலை இணைப்பதற்கு விக்னேஸ்வரன் கடும் பிரயத்தனம்! – சம்பந்தனின் எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்துக்கும் ஆப்புவைக்க முடிவு

m”தற்போதைய நாடாளுமன்றத்தின் மிகுதிக் காலம் கிட்டத்தட்ட 2 வருடங்கள் முடியும் வரையில் ஒரு தேசியக் கூட்டரசை மஹிந்த ராஜபக்‌ஷவுடன் ரணில் விக்கிரமசிங்க ஏற்படுத்தி முக்கியமான விடயங்களுக்கு ஏன் பரிகாரம் தேட முடியாது. அல்லது ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராக நியமித்து மஹிந்த ராஜபக்‌ஷவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டாலும் பொருத்தமாக அமையும்.”

– இவ்வாறு ஆஸ்திரேலியப் பிரதித் தூதுவரிடம் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் யோசனை முன்வைத்தார்.

ஆஸ்திரேலிய பிரதித் தூதுவர் விக்டோரியா ஹோக்லி நேற்று யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்தார். அவர் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரனை அவரது யாழ்ப்பாண இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இந்தச் சந்திப்பு சுமார் ஒன்றரை மணி நேரம் இடம்பெற்றது. இந்தச் சந்திப்புத் தொடர்பில் கொழும்பிலுள்ள ஆஸ்திரேலிய தூதரகம் முன்னதாகவே ஊடகங்களுக்குத் தகவல் வழங்கியிருந்தது. அதனால் சந்திப்புத் தொடர்பான ஒளிப்பதிவு மற்றும் செய்தி சேகரிக்கச் சென்றிருந்த யாழ்ப்பாண ஊடகவியலாளர்கள், தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரின் பாதுகாப்பு பொலிஸாரால் அனுமதி மறுத்துத் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இந்தநிலையில் இந்தச் சந்திப்புத் தொட.ர்பில் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனால் ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்று அனுப்பிவைக்கப்பட்டது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

“ஆஸ்திரேலிய பிரதித் தூதுவர் விக்டோரியா ஹோக்லி என்னைச் சந்தித்தார். தூதுவருக்கு கொழும்பில் பல வேலைகள் இருப்பதால் தன்னை அனுப்பியதாகக் கூறினார். பொதுவாக இன்றைய மத்திய அரசின் நிலை பற்றியும் வடமாகாணத்தின் அரசியல் நிலை பற்றியும் அறிந்து கொள்ளவே தாம் இங்கு வந்ததாகக் கூறியிருந்தார்.

மத்திய அரசில் தற்போது நிர்வாக ரீதியாகவும் வேலைகள் ஸ்தம்பிதம் அடைந்திருக்கும் நிலை பற்றி நாங்கள் இருவரும் ஆராய்ந்தோம். தற்போதைய நிலையில் எவ்வாறு மத்திய அரசால் அரசியல் நடவடிக்கைகள் கொண்டு செல்லப்படலாம் என்று அவர் எனது கருத்தைக் கேட்டார். ஒரு நீதியரசராக இருந்த நான் எந்நேரமும் ஒரு பிரச்சினையை எவ்வாறு தீர்க்கலாம் என்றுதான் பார்ப்பேன். அந்த வகையில் தற்போதைய நிலையை இலங்கைக்கு நன்மை தருவதாக மாற்றலாம் என்ற கருத்தை அவருக்குத் தெரிவித்தேன்.

அது எப்படி என்று அவர் கேட்டார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் 40 ஆண்டுகாலமாக பதவி வகித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திடீர் என்று ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ரணில் விக்கிரமசிங்கவுடன் ஒரு ஒப்பந்த அடிப்படையில் 2015 ஜனவரி தொடக்கம் கூட்டரசு ஒன்றை நடத்த முடிந்ததாக இருந்தால் தற்போதைய நாடாளுமன்றத்தின் மிகுதிக் காலம் கிட்டத்தட்ட 2 வருடங்கள் முடியும் வரையில் ஒரு தேசியக் கூட்டரசை மஹிந்த ராஜபக்ஷவுடன் ரணில் விக்கிரமசிங்க ஏற்படுத்தி முக்கியமான விடயங்களுக்கு ஏன் பரிகாரம் தேட முடியாது என்று கேட்டேன். எவ்வாறு அது சாத்தியமாகலாம் என்று கேட்டார்.

அதாவது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தின் கீழ் மஹிந்த ராஜபக்ஷவுடன் ரணில் ஒரு கூட்டு அரசுக்கான உடன்படிக்கையைக் கைச்சாத்திட்டு நாட்டின் முக்கிய பிரச்சினைகளை இருவரும் தீர்க்க முன்வரலாமே என்று கூறினேன். “அது முடியுமா?” என்று அவர் கேட்டார். இரு தரப்பாரும் நாட்டின் நலன் கருதி இவ்வாறான கூட்டு அரசை நிறுவ பின்வரும் முக்கிய விடயங்களைத் தீர்த்து வைக்கலாம் என்று கூறினேன்.

முதலாவதாக தமிழர்களின் பிரச்சினைகள். இது சம்பந்தமாக இருவரும் சேர்ந்து ஜனாதிபதி ஊடாக சிறையில் வாடும் தமிழ்ச் சிறைக் கைதிகளை விடுவிக்கலாம். பயங்கரவாதத் தடைச் சட்டத்தை உடனே நீக்கலாம்.

காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தை மேலும் பலம் வாய்ந்ததாக மாற்றலாம்.

ஜெனிவாவில் அடுத்த வருடம் மார்ச் மாதத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி ஒரு சுமுகமான தீர்வுக்கு வரலாம்.

தமிழ் மக்கள் பிரச்சினையை ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் தமிழர் தரப்புகள் என மூன்று தரப்பாரும் பேசித் தீர்க்கலாம். அதாவது புதிய அரசியல் யாப்பை சமஷ்டி அடிப்படையில் முழு நாட்டிற்கும் ஏற்புடைத்ததாக இயற்றலாம் என்றேன்.

அடுத்து எமது பொருளாதார நிலையைச் சீர்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினேன். ஜி.எஸ்.பி. நிறுத்தப்பட்டமை சம்பந்தமாகவும் வெளிநாட்டில் இருந்து வரும் உதவிகள் நிறுத்தப்பட்டமை சம்பந்தமாகவும் உரிய நடவடிக்கை எடுத்து நாட்டின் ஸ்திரத் தன்மையை நிச்சயப்படுத்தலாம். குறைந்து கொண்டு போகும் எமது ரூபாயின் பெறுமதியைத் திடப்படுத்தலாம். நாட்டின் கடன் சம்பந்தமாக இருவரினதும் ஒருமித்த கருத்துக்களினூடு அவற்றைத் திரும்பச் செலுத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

எதற்கும் ரணிலைத் தொடர்ந்து பிரதம மந்திரியாக ஏற்றுக்கொண்டு மஹிந்தாவை எதிர்க்கட்சித் தலைவர் ஆக்கி இருதரப்பாரிடையேயும் ஒரு உடன்படிக்கையை உண்டு பண்ணலாம்.

மற்றும் பல விடயங்களில் ஒருங்கிணைந்து நாட்டைக் காப்பாற்றுவதற்கு இரு தரப்பாரும் முன்வரலாம். இன்றைய கால கட்டத்தில் இது அதி முக்கிய தேவையாக இருப்பதை இரு தரப்பாரும் உணர்ந்து கொண்டால் இவ்வாறான கூட்டரசை அவர்கள் ஸ்தாபிக்க முடியும்.

இதற்கு ஒரே ஒரு முக்கிய தடை இருப்பதை நான் காண்கின்றேன். குறிப்பாக எதிர்க்கட்சியினருக்கு எதிராக விசேட மேல் நீதிமன்றங்கள் நியமிக்கப்பட்டிருப்பதைக் கவனத்தில் எடுக்க வேண்டும். அடுத்த இரண்டு வருடங்களுக்கும் குறித்த மேல் நீதிமன்றங்கள் சம்பந்தமான நடவடிக்கைகளைத் தற்போதைய அவசரமும் அவசியமும் கருதி தள்ளி வைக்கலாம் என்று எண்ணுகின்றேன். ஆனால், உரியகாலத்தில் சட்டம் தனது நடவடிக்கைகளை எடுக்க அனுமதி வழங்கப்பட வேண்டும்.

ஆஸ்திரேலிய பிரதித் தூதவர், இவை சம்பந்தமாக மத்திய அரசினர் என்ன நினைப்பார்கள் என்று தமக்குத் தெரியாது என்றும், ஒரு சுமுகமான தீர்வைக் கொண்டுவர வடக்கில் இருக்கும் நான் இந்தளவுக்குச் சிந்தித்தது பற்றிக் கூறிப் பாராட்டினார்.

அடுத்து கள நிலவரம் பற்றி குறிப்பிட்டு தென்னவர்களின் குடியேற்றங்கள் பற்றியும் பௌத்த கோவில்கள் திறக்கப்படுவது பற்றியும், நிர்வாக ரீதியாக நாங்கள் முகம் கொடுத்த தடைகள் பற்றியும் வடக்கு மாகாண சபை சம்பந்தமாகப் பலதையும் பேசிக் கொண்டோம்” – என்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *