17 உறுப்பினர்கள் ‘டோட்டல் பூஜ்ஜியம்’ – ஊவா மாகாண சபையில் அவலம்!

ஊவா மாகாண சபையின் கடந்த மூன்றரை ஆண்டுகளில் நடைபெற்ற சபை அமர்வுகளில், சபை உறுப்பினர்களில் பதினேழு பேர், மக்கள் எதிர்நோக்கும் எந்தவொரு பிரச்சினைகள் தொடர்பாக, எந்தவொரு பிரேரணையையும் முன்வைக்காமல், வெறுமனே இருந்து வந்திருப்பது தெரிய வந்துள்ளது.


மேலும், மக்கள் பிரதிநிதிகளான இவ் உறுப்பினர்கள், மக்கள் எதிர்நோக்கும் எந்தவொரு பிரச்சினையும், சபை அமர்வில் முன்வைக்கவில்லையென்பதும், இங்கு குறிப்பிடத்தக்கது.

ஊவா மாகாண சபையில் முப்பத்திநான்கு பேர் (34 பேர்) மக்கள் பிரதிநிதிகளாக இருந்து வருகின்றனர். இம் மாகாண சபையின் ஆட்சி அதிகாரம் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவற்றின் கூட்டாட்சியாகவே இருந்து வருகின்றது.

மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தலைமையில் செந்தில் தொண்டமான், சாலிய சுமேத, அனுர விதான கமகே ஆகிய மாகாண அமைச்சர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பாகவும் உபாலி சமரவீர என்ற ஐக்கிய தேசியக் கட்சி சார்பிலான மாகாண அமைச்சராக ஐந்து பேர் உள்ளிட்டு 34 பேர் மக்கள் பிரதிநிதிகளாக இருந்து வருகின்றனர்.

இவர்களில், மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான், சபை உறுப்பினர்களான ஆறுமுகம் சிவலிங்கம், முருகன் சச்சிதானந்தன், ஆறுமுகம் கணேசமூர்த்தி, வேலாயுதம் ருத்திரதீபன் ஆகிய ஐந்து தமிழர்களும், ஊவா மாகாண சபையில் அங்கம் வகிக்கின்றனர். முஸ்லீம் சமூகம் சார்ந்தவர்கள், எவரும் சபை உறுப்பினர்களாக இல்லையென்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஊவா மாகாண சபையின், ஆறாவது சபை அமர்வில் 17 பேர் மட்டுமே 156 பிரேரணைகளை முன்வைத்துள்ளனர். இப் பிரேரணைகளில் 42 பிரேரணைகள் தனி நபர் பிரேரணைகளாக இருந்து வருகின்றன. முன்வைக்கப்பட்ட இப்பிரேரணைகளில் தலா ஒவ்வொரு பிரேரணைகள், ஊவா மாகாண சபையிலிருந்து பாராளுமன்றம் சென்று அமைச்சராக இருந்து வரும் ரவீந்திர சமரவீர மற்றும் குமாரசிரி ரட்னாயக்க ஆகிய இருவராவார்.

ஊவா மாகாண சபை அமர்வில் மக்கள் எதிர்நோக்கும் ஆகக் கூடிய பிரச்சினைகள் குறித்த பிரேரணைகளை முன்வைத்தவர் ஜே.வி.பி. உறுப்பினர் சமந்த வித்தியாரட்னவேயாவார். அவர் 37 பிரேரணைகளை சபை அமர்வில் முன்வைத்துள்ளார். அத்துடன் தனி நபர் பிரேரணையாக 11 பிரேரணைகளையும் முன்வைக்கப்பட்டிருக்கின்றது.

இரண்டாவதாக ஊவா மாகாண சபையின் எதிர்கட்சித் தலைவராக இருந்து வரும் ஆர். எம். ரட்னாயக்க 31 பிரேரணைகளையும், தனி நபர் பிரேரணைகள் இரண்டும் முன்வைத்துள்ளார்.

அடுத்து, ஊவா மாகாண சபை உறுப்பினர் முருகன் சச்சிதானந்தன் 21 பிரேரணைகளையும் இரண்டு தனி நபர் பிரேரணைகளையும் முன்வைத்துள்ளார்.

ஊவா மாகாண சபையின் ஜே.வி.பி. உறுப்பினர் ஆர்.எம். ஜயவர்த்தன, 15 பிரேரணைகளையும், ஆறு தனி நபர் பிரேரணைகளையும் சமர்ப்பித்துள்ளார்.

ஊவா மாகாண சபை உறுப்பினர் சுதர்சன தெனிபிட்டிய பத்து பிரேரணைகள் மற்றும் இரண்டு தனிநபர் பிரேரணைகள்
ஊவா மாகாண சபை உறுப்பினர் விமல் கலங்கமராய்ச்சி நான்கு பிரேரணைகள்,

சபை உறுப்பினர் உதார சொய்சா மூன்று பிரேரணைகள், மற்றும் ஒரு தனிநபர் பிரேரணை,

மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க இரு பிரேரணைகள், சபை உறுப்பினர் செனரத் ஜயசூரிய இரு பிரேரணைகள் மற்றும் ஒரு தனிநபர் பிரேரணை
சபை உறுப்பினர் ரோய் காலிந்த இரு பிரேரணைகள், வேலாயுதம் ருத்திரதீபன் இரு பிரேரணைகள் மற்றும் ஆறு தனிநபர் பிரேரணைகள், மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் ஒரு பிரேரணை மற்றும் ஒரு தனிநர் பிரேரணை, சபை உறுப்பினர்;களான ஆர்.எம். ஜயசிங்க பண்டார, எம்.பி. லீலசேன, ஜானக்க திஸ்ஸ குட்டியாராய்ச்சி, ஆகியோர் தலா ஒவ்வொரு பிரேரணைகளாகவும், சபை உறுப்பினர் ஆறுமுகம் சிவலிங்கம் நான்கு தனிநபர் பிரேரணைகள், சபை உறுப்பினர் குடா பண்டார மெதவெல ஒரு தனிநபர் பிரேரணையாக, பிரேரணைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

கடந்த மூன்றரை ஆண்டு காலமாக, ஊவா மாகாண மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளடங்கிய 114 பிரேரணைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஏனைய 42 பிரேரணைகளும் தனி நபர் பிரேரணைகளாகும்.

சபையின் ஜே.வி.பி. உறுப்பினர் சமந்த வித்தியாரட்ன சமர்ப்பித்த 37 பிரேரணைகளில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் அடங்கிய பல பிரேரணைகளும் உள்ளடங்கியுள்ளன.

மேலும், சபையின் தமிழ் உறுப்பினர்கள் சார்பில் 24 பிரேரணைகளும், 13 தனிநபர் பிரேரணைகளும் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றன. இப்பிரேரணைகளில் சபை உறுப்பினர் முருகன் சச்சிதானந்தன் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளடங்கிய 21 பிரேரணைகளையும், இரு தனி நபர் பிரேரணைகளையும் சமர்ப்பித்துள்ளார்.

ஊவா மாகாண சபை செயலாளரின் பதிவேட்டிலிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையிலேயே, மேற்படி புள்ளி விபரங்கள் தெரிய வந்துள்ளன.

பதுளை நிருபர்  –  செல்வா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *