அரசியல் குழப்பம் நீடித்தால் பயணத்தடை – சொத்துகள் முடக்கம் ! அதிரடிக்கு தயாராகின்றன வெளிநாடுகள்!!

இலங்கையில் அரசியல் குழப்பம் தொடருமானால், அதற்கு வழிவகுக்கும்  அரச தரப்பைச் சேர்ந்தவர்கள் மீது பயணத்தடை, மற்றும் சொத்துக்கள் மீதான தடைகளை விதிக்கும் முடிவுகளை எடுக்க சில நாடுகள் திட்டமிட்டுள்ளன என்று இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையில் ஜனநாயகத்தைக் காப்பாற்றும் நோக்கில், அமெரிக்கா, பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா போன்ற நாடுகளே இந்த முடிவுகளை எடுக்கக் கூடும் என்றும் அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

அரசியல் நெருக்கடிகளைத் தீர்ப்பதில் பிடிவாதமான நிலைப்பாட்டில் இருந்தால், இந்த அரசியல் குழப்பங்களுக்குக் காரணமானவர்கள் மீது பயணத்தடை விதிக்கப்படலாம் என்றும், தமது நாடுகளில் உள்ள குறிப்பிட்ட நபர்களின் சொத்துக்களை முடக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபடலாம் என்றும் இராஜதந்திர வட்டாரங்கள் கூறியுள்ளன.

அரசியல் நெருக்கடிக்கு, அரசமைப்பின் பிரகாரம் உரிய தீர்வைகாணுமாறு ஐரோப்பிய ஒன்றியம் உ ள்ளிட்ட மேலும் பல நாடுகள் வலியுறுத்தியிருந்தன. ஐ.நா. பொதுச்செயலாளர், பொதுநலவாய அமைப்பின் செயலாளர் ஆகியோரும் இவ்வலியுறுத்தலை விடுத்திருந்தனர்.

இந்நிலையில், இதுவிடயத்தில் ஜனாதிபதி உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகின்றது. நாடாளுமன்றத்தால் எடுக்கப்படும் தீர்மானங்களை முடக்கும் வகையிலேயே நிறைவேற்று அதிகாரங்களை அவர் பயன்படுத்திவருகிறார் என ஐ.தே.க. சுட்டிக்காட்டியுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *