விரைவில் ஐ.தே.கவில் இணைகிறார் துமிந்த? தடுத்து நிறுத்த மைத்திரி கடும் பிரயத்தனம்!

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தேசிய அமைப்பாளரான துமிந்த திஸாநாயக்க விரைவில் ஐக்கிய தேசியக்கட்சியில் இணையவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்குரிய பேச்சுகள் திரைமறைவில் இடம்பெற்றுவருவதாகவும், ஐ.தே.கவின் மூத்த தலைவர் ஒருவரே பேரம் பேசும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார் என்றும் அறியமுடிகின்றது.

கூட்டரசிலிருந்து ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி 2020 ஆம் ஆண்டுவரை வெளியேறக்கூடாது என்பதுதான் துமிந்த திஸாநாயக்கவின் நிலைப்பாடாக இருந்தது. எனினும், கட்சித் தலைவரின் முடிவுக்கு கட்டுப்படவேண்டிய நிலை ஏற்பட்டது.

இதனால், கடும் அதிருப்தியிலேயே துமிந்த இருக்கிறார். நாடாளுமன்ற அமர்வுகளில்கூட பங்கேற்கவில்லை. மஹிந்த அரசில் அமைச்சுப்பதவியைகூட இறுதியாகவே பெற்றிருந்தார்.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே ஐ.தே.க. அவரை குறிவைத்துள்ளது. எனினும், துமிந்தவை சமரசப்படுத்தும் முயற்சியில் மைத்திரி தரப்பு இறங்கியுள்ளது. வடமத்திய மாகாண முதலமைச்சர் என்ற ஆசையை அவர் மனதில் விதைக்கும் முயற்சியிலும் இறங்கியுள்ளது.

வடமத்திய மாகாணசபையின் முதல்வராக இருந்த பேர்ட்டி பிரேம்லாலில் மகன்தான் துமிந்த திஸாநாயக்க. சுதந்திரக்கட்சியின் மூத்த உறுப்பினராக இருந்த பேர்ட்டியை வெட்டிவிட்டு, சந்திரசேனவின் தம்பிக்கு அம்மாகாணத்தின் முதல்வரை பதவியை மஹிந்த வழங்கினார்.

இதை அடிப்படையாகக்கொண்டு 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சுதந்திரக்கட்சிலிருந்து துமிந்த திஸாநாயக்க வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *