நீதியை மறுத்து தவறு செய்து விடாதீர்! அதன் தாக்கத்தை ஒரு நாள் உணர்வீர்!! – மைத்திரிக்கு லசந்தவின் மகள் காட்டமான கடிதம்

மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட பிரபல ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அஹிம்சா விக்கிரமதுங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு காட்டமான கடிதமொன்றை எழுதியுள்ளார்.

“முப்படைகளின் பிரதானியையும் வெள்ளை வான் மூலம் மரணத்தை ஏற்படுத்துபவர்களையும் பாதுகாப்பதற்காக நீங்கள் சத்தியப்பிரமாணம் செய்யவில்லை” என்று அந்தக் கடிதத்தில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“நீதியை மறுத்து தவறு செய்து விடாதீர்கள். அதன் தாக்கத்தை ஒரு நாள் உணர்வீர்கள்” என்றும் அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

லசந்த விக்கிரமதுங்க படுகொலை உட்பட மஹிந்த ராஜபக்ஷ அரசின் காலத்தில் இடம்பெற்ற முக்கிய சம்பவங்களை விசாரணை செய்து வந்த குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி நிஷாந்த சில்வா இடமாற்றம் செய்யப்பட்டதைக் கண்டித்து ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

“இலங்கையின் அரசமைப்பை பின்பற்றுவதற்காகவும் பாதுகாப்பதற்காகவுமே நீங்கள் சத்தியப்பிரமாணம் செய்துள்ளீர்கள். உங்கள் முப்படைகளின் பிரதானியை பாதுகாப்பதற்காகவோ அல்லது வெள்ளை வான் மரணத்தின் மூலம் ஆட்சிபுரிபவர்களை பாதுகாப்பதற்காகவோ நீங்கள் சத்தியப்பிரமாணம் செய்யவில்லை.

இவர்கள் ஏதாவது குற்றத்தில் ஈடுபட்டார்களா என்பது எனக்கும் தெரியாது. உங்களுக்கும் தெரியாது. நீங்கள் இடமாற்றுவதற்கு முன்னர் நிஷாந்த சில்வா மேற்கொண்ட ஓய்வற்ற குற்றவியல் விசாரணைகளின் அடிப்படையில் இதனை நீதிமன்றம் தீர்மானிக்கவேண்டும்.

என்னைப் பொறுத்தவரை ஒரு சாட்சி என்ற அடிப்படையில் கேள்விகளுக்கு உண்மையான – முழுமையான பதிலை வழங்குவது முக்கியமான விடயமாகும்.

தேசத்தின் தலைவர் என்ற அடிப்படையில் உங்களைப் பொறுத்தவரை தனிப்பட்ட உறவுகள், அரசியல் தேவைகள், உங்கள் மனவிருப்பங்களைவிட சட்டத்திற்கு முக்கியத்துவம் அளிப்பது முக்கியமானது.

உங்களைப் பொறுத்தவரை விசாரணையாளர்களுக்குத் தேவையான வளங்களை வழங்குவதும் அரசின் ஆதரவை வழங்குவதுமே முக்கியமானது.

நீதியை மறுத்து தவறு செய்து விடாதீர்கள். அதன் தாக்கத்தை ஒரு நாள் உணர்வீர்கள்” – என்று ஜனாதிபதி மைத்திரிக்கு எழுதியுள்ள கடிதத்தில் லசந்தவின் மகள் அஹிம்சா குறிப்பிட்டுள்ளார்.

ஆங்கிலத்தில் நான்கு பக்கங்களில் எழுத்தப்பட்ட அந்தக் கடிதத்தின் பிரதிதிகள் அரசமைப்பு பேரவை , தேசிய பொலிஸ் ஆணைக்குழு , பொலிஸ்மா அதிபர், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஆகியவற்றுக்கும் அவர் அனுப்பியுள்ளார். கடிதத்தின் பிரதி இந்தச் செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ளது. கடிதத்தின் பிரதி இந்தச் செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி நிஷாந்த சில்வாவுக்கு ஜனாதிபதியால் வழங்கப்பட்ட இடமாற்ற உத்தரவை தேசிய பொலிஸ் ஆணைக்குழு இரத்துச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *