முல்லைத்தீவு பாடசாலையில் மதிய உணவுக்குள் முழுப் பல்லி! – 39 மாணவர்கள் வைத்தியசாலையில்
முல்லைத்தீவு வன்னிவிளாங்குளம் பாடசாலையில் வழங்கப்பட்ட மதிய உணவில் பல்லி ஒன்று உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளது.
இதனையடுத்து மதிய உணவை உட்கொண்ட 36 மாணவர்களும் வைத்தியப் பரிசோதனைக்காக மாங்குளம் மற்றும் மல்லாவி வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டனர்.
முல்லைத்தீவு துணுக்காய் கல்வி வலயத்தின் கீழ் உள்ள வன்னிவிளாங்குளம் பாடசாலையில் நேற்று மதியம் வழங்கப்பட்ட மதிய உணவைப் பெற்றுக்கொண்ட மாணவி ஒருவரின் சாப்பாட்டுக் கோப்பைக்குள் உயிரிழந்த நிலையில் முழுமையான பல்லி ஒன்று காணப்பட்டது. இதனையடுத்தே மதிய உணவை உட்கொண்ட 36 மாணவர்களும் உடனடியாக மாங்குளம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். மாங்குளம் வைத்தியசாலையில் போதிய இடவசதியின்மையால் இதில் 16 மாணவர்கள் மல்லாவி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
இது தொடர்பில் மாங்குளம் வைத்தியசாலையில் தொடர்புகொண்டு கேட்டபோது, “இந்தப் பாடசாலையில் வழங்கப்பட்ட மதிய உணவில் உயிரிழந்த பல்லி காணப்பட்டமை தொடர்பில் உணவில் ஏதாவது நச்சுத்தன்மை ஏற்பட்டு மாணவர்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என்ற காரணத்தால் அவர்கள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். ஆயினும், மாணவர்களில் வித்தியாசங்கள் எதுவும் காணப்படவில்லை” என்று வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்தது.
இந்த விடயம் தொடர்பில் துணுக்காய் வலயக் கல்விப் பணிப்பாளரைத் தொடர்புகொண்டு கேட்டபோது, “வலயக்கல்வித் திணைக்களத்துக்கு அண்மித்த பகுதியில் அமைந்துள்ள இப்பாடசாலைக்குச் சென்று மாணவர்களை வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்துள்ளோம். இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்ட மாணவர்களை உதவிக் கல்விப்பணிப்பாளர் மற்றும் கல்வி உத்தியோகத்தர்கள் சென்று பார்வையிட்டனர்” என்றார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் சம்பவ இடத்துக்கு விரைந்த பொதுச் சுகாதாரப் பரிசோதகர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.