போலியான மஹிந்த அரசை முடக்க சபைக்குள்ளும் வெளியிலும் அதிரடி நடவடிக்கைகள்! – ஹக்கீம் தெரிவிப்பு

“பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அரசுக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்க மறுத்துள்ளதால் பிரதமர் செயலகத்தை முடக்கும் வகையிலும், அதற்கான நிதி அதிகாரத்தை இடைநிறுத்துவதற்கான பிரேரணையை எதிர்க்கட்சிகள் சபாநாயகரிடம் சமர்ப்பித்துள்ளன. குறித்த பிரேரணை எதிர்வரும் 29ஆம் திகதி வெள்ளிக்கிழமை விவாதத்திற்கு உட்படுத்தி நிறைவேற்றுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.”

– இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

நாடாளுமன்ற அமர்வின் பின்னர் இன்று மதியம் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றக் குழு அறையில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தியிருந்தன. இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ரவூப் ஹக்கீம் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஜனாதிபதியுடனான சந்திப்பின்போது பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது பெயர் குறிப்பிட்டு வாக்கெடுப்பை நடத்த வேண்டும் இல்லையென்றால் இலத்திரனியல் வாக்கெடுப்பு முறை மூலம் வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று கூறினார். அத்துடன், குரல் அடிப்படையில் எடுக்கப்படும் வாக்கெடுப்பை தான் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்றும் தெரிவித்திருந்தார். நாடாளுமன்றத்தில் இன்றைய அமர்வின்போது பெயர் குறிப்பிட்டு அதே பிரேரணைக்கு மீண்டும் வாக்கெடுப்பை நடத்துவதற்கு நாங்கள் தயாராக இருந்தோம். ஆனால், அதனையும் அவர்கள் நிராகரித்துள்ளனர். இதன்படி மீண்டும் வாக்கெடுப்பை நடத்துவதை தடுப்பதே அவர்களின் நோக்கமாக இருந்தது.

இவ்வாறான நிலைமையில் நாங்கள் அடுத்தகட்டமாக பிரதம அமைச்சரின் செயலாளர் எந்தச் செலவீனங்களையும் செய்ய முடியாதவாறு பிரேரணையொன்றைக் கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளோம். நிதி விடயங்கள் தொடர்பான மற்றும் செலவீனங்கள் தொடர்பாக அனைத்து அதிகாரங்களும் நாடாளுமன்றத்திற்கு இருக்கின்றது. அரசமைப்பின் 148ஆம் உறுப்புரிமைக்கமைய நாங்கள் பிரேரணையை அடையாள ரீதியில் கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளோம். இதேவேளை, ஏனைய அமைச்சுக்களுக்கும் நிதி செலவீனங்களை செய்ய முடியாத வகையில் நிலைமைகளை ஏற்படுத்த முடியும். எவ்வாறாயினும் அடையாள ரீதியில் அவர்களுக்கு அபாய அறிவிப்பை விடுக்கும் வகையில் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளோம்.

இதன்படி குறித்த பிரேரணைக்கு கால அவகாசம் வழங்கி எதிர்வரும் 29ஆம் திகதி விவாதத்திற்கு உட்படுத்தி வாக்கெடுப்புக்கு விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதுதவிர நாடாளுமன்றத்திற்கு வெளியிலும் போலியான அரசுக்கு எதிராக நாம் சில நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளோம். இது தொடர்பாக அடுத்து வரும் நாட்களில் அறிவிப்போம்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *