மைத்திரி – ரணில் இன்றிரவு சந்திப்பு! – உதவியாளர்கள் இன்றி கலந்தாலோசனை; கருத்து வேறுபாடுகளைக் களைய முயற்சி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் அவரால் பிரதமர் பதவியிலிருந்து திடீரென விலக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் இன்றிரவு மிக முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெறவிருக்கின்றது என மிக நம்பகமாக அறியமுடிகின்றது.

வேறு உதவியாளர்களின்றி இருவரும் தனித்தனியே சந்திப்பர் எனவும் தெரியவருகின்றது.

இந்தச் சந்திப்பின் போது ஏற்கனவே இருவருக்கும் இடையில் நீடித்துவரும் கருத்து முரண்பாட்டைக் களையும் முயற்சியில் இருவரும் ஈடுபடக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களை ஒரு கலந்துரையாடலுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைத்துள்ளார். அந்தக் கலந்துரையாடல் இன்று மாலை 5 மணிக்கு இடம்பெறுகின்றது.

அதன் பின்னர் இன்றிரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன – ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சந்திப்பு நடைபெறவுள்ளது.

இரு தரப்பு சகாக்களின் கோரிக்கையின் பேரிலேயே இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது தெரியவருகின்றது.

நேற்று மாலை முதல் பொலனறுவையில் தங்கியிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பிற்பகலுக்குப் பின்னர் கொழும்பு திரும்புவார் என்றும், அதன் பிறகு இந்தச் சந்திப்புக்கள் இடம்பெறலாம் என்றும் விடயமறிந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டன.

கடந்த 26 ஆம் திகதி பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்கவை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அகற்றிய பிறகு இருவரும் நேருக்கு நேர் சந்திக்கப் போகின்றமை இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *