மைத்திரியை சந்தித்தது உண்மை! மகிந்த தேசப்பிரியவும் இருந்தார்!! – மல்கம் ரஞ்சித் ஒப்புதல்

நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட அன்று இரவு, ஜனாதிபதி செயலகத்துக்குத் தான் சென்றதை ஒப்புக்கொண்டுள்ள கத்தோலிக்கத் திருச்சபையின் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித், அங்கு தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரியவும் இருந்தார் என்றும் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தைக் கலைக்கும் வர்த்தமானி அறிவிப்பு கடந்த 9ஆம் திகதி வரையப்பட்ட போது, ஜனாதிபதி செயலகத்தில் கர்தினால் மல்கம் ரஞ்சித், முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா ஆகியோர் இருந்தனர் என்றும், தேர்தல் நாள் பற்றிக் கணக்கிடுவதற்காக தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவும் அழைக்கப்பட்டிருந்தார் என்றும் சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.

நாடாளுமன்றக் கலைப்பு சதிக்குப் பின்னால் இந்த மூவரும் இருந்தனர் என்ற குற்றச்சாட்டு வெளியானதை அடுத்து பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் நேற்றிரவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், கடந்த நவம்பர் 9ஆம் திகதி இரவு ஜனாதிபதி செயலகத்துக்குத் தான் சென்றது உண்மை என்றும், அங்கு மகிந்த தேசப்பிரிய இருந்ததைக் கண்டதாகவும், எனினும், சரத் என் சில்வா அங்கு இருக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.

ஜனாதிபதியைத் தான் அன்று சந்தித்த போதும், நாடாளுமன்றக் கலைப்பு குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனவும் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவுடன் ஓர் இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்குத் தானும், இத்தபனே தம்மாலங்கார தேரரும் தயாராக இருப்பதாக ஜனாதிபதியிடம் கூறியதாகவும், அதற்கு இணங்கியிருந்த அவர், திடீரென நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டார் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தம்மை ஏமாற்றிய நடவடிக்கை என்றும் அந்த அறிக்கையில் கர்தினால் மல்கம் ரஞ்சித் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *