அரசமைப்பைத் தமிழர்கள் இனி நம்பிப் பலனில்லை! – அடுத்த கட்டத்துக்கு நகரவேண்டும் என்கிறார் சத்தியலிங்கம்

இன்றைய அரசியல் நிலையைப் பார்க்கையில் அரசமைப்பை நம்பிப் பலனில்லை எனத் தோன்றுவதாக வடக்கு மாகாண சபையின் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.

நேற்றுச் சனிக்கிழமை வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இன்று ஏற்பட்டுள்ள பிரச்சினை முழுநாட்டையும் ஏதோ ஒரு விதத்தில் பாதித்துள்ளது. ஜனாதிபதி தூரநோக்கில்லாமல் அரசமைப்பை மீறி மேற்கொண்ட செயற்பாடுகளால் நாடாளுமன்றில் மிளகாய்த்தூள் வீசும் நிலைமை ஏற்பட்டுள்ளது. சபாநாயகரின் கதிரையைத் தூக்கிக் கொண்டு ஓடுகிறார்கள். இன்னுமொருவர் கத்தியோடு நிற்கிறார். இன்று நாடாளுமன்றத்தின் நிலை இப்படியிருக்கின்றது.

மஹிந்த மக்கள் மீது அக்கறை கொண்டவராக இருந்தால் தனக்குப் பெரும்பான்மை காட்டமுடியாது என்பதை உணர்ந்து விலகிக்கொள்ளவேண்டும். அந்த எண்ணம் அவருக்கு இல்லை.

எமக்குக் கிடைக்கவேண்டிய உரிமையை இந்த நாட்டினுடைய அரசமைப்பின் மூலம்தான் பெற்றுகொள்ளமுடியும் என்ற நம்பிக்கையில் நாம் இருக்கின்றோம்.

அப்படியிருக்கும்போது ஏற்கனவே நடைமுறையில் உள்ள அரசமைப்பையே ஜனாதிபதியும் முன்னாள் ஜனாதிபதியும் சேர்ந்து அப்பட்டமாக மீறும்போது அரசமைப்பினூடாக தமிழர்களுக்குக் கொடுக்கப்படும் உரிமைகள் ஏன் மீறப்படாது என்ற கேள்வி எழுகின்றது.

எனவே, தமிழர்கள் அரசமைப்பை நம்பாமல் தனிநாட்டுக் கோரிக்கைக்குப் போகவேண்டுமா என்ற கேள்வியை எமக்கு முன்னாலே இந்த அரசு கொண்டுவந்து விட்டிருக்கின்றது. எனவே, ஒரு சிவில் யுத்தம் ஏற்படுவதற்கான சூழலை உருவாக்கியுள்ளதை அவர்கள் உணரவேண்டும்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *