சர்வகட்சிக் கூட்டத்தை ஜே.வி.பியும் புறக்கணிப்பு! – மைத்திரிக்கு காட்டமான கடிதம்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ள சர்வகட்சி தலைவர்களின் கூட்டத்தில் தாங்கள் பங்கேற்கமாட்டோம் என்று அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான ஜே.வி.பி. அறிவித்துள்ளது.
சர்வகட்சித் தலைவர்களின் கூட்டத்துக்கு நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளுக்கும் ஜனாதிபதி நேற்று அழைப்பு விடுத்திருந்தார்.
இந்நிலையிலேயே, ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அதேவேளை, சர்வகட்சிக் கூட்டத்தைப் பகிஷ்கரித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஜே.வி.பி. காட்டமான கடிதம் ஒன்றையும் இன்று பகல் அனுப்பியுள்ளது.
“நாட்டின் இன்றைய நிலைக்கு நீங்களே பொறுப்பு. பிரச்சினையை ஆரம்பித்த நீங்களே அதனை முடிக்க வேண்டும். அதற்கான மனோபலம் உங்களுக்கு இன்னமும் இருக்கிறதென நாங்கள் நம்புகின்றோம். அரசமைப்பை – ஜனநாயகத் தீர்ப்பை மதித்துச் செயற்படுங்கள்” என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடிதத்தின் சிங்களப் பிரதி இந்தச் செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ளது.