சபாநாயகரின் முடிவு சரியா? நிலையியற்கட்டளைகள் சொல்வது என்ன?

பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஏற்கப்போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

 
பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்கவை நீக்கிவிட்டு அரசமைப்பைமீறும் வகையில் இரவோடிரவாக நாடாளுமன்றத்தைக் கலைத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது அரசமைப்பு குறித்தும், ஜனநாயகம் பற்றியும் பேசுவது கேலிக்கூத்தான செயலாகும் என்று அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
 
அதேவேளை, சபாநாயகரின் செயற்பாட்டையும் அவர் கடுமையாக விமர்சித்துவருகிறார். எனினும், நிறைவேற்று அதிகாரத்துக்கு அடிபணியாது, ஜனநாயகத்தைப் பாதுகாத்த சபாநாயகர் ‘ஜனநாயகத்தின் காவல் தெய்வம்’ என்று ஐக்கிய தேசியக்கட்சியினர் அறிவித்துவருகின்றனர்.
 
மஹிந்த ராஜபக்சவுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருந்திருந்தால் அதை நிரூபிப்பதற்கு அவர்கள் ஏன் பின்வாங்க வேண்டும், சபை நடவடிக்கைகளை முடக்கும் செயலில் இறங்கவேண்டும் என எழுப்படும் கேள்விகள் நியாயமானவையாக இருக்கின்றன.
நாடாளுமன்றத்தில் குரல்மூல வாக்கெடுப்பே மிகவும் பொதுவான வாக்கெடுப்பு முறையாகும். ( குரல்மூல வாக்கெடுப்பு என்றால் என்னவென்பது கீழே இணைக்கப்பட்டுள்ளது.)
 
இம்முறைமையின்கீழ் வாக்கெடுப்பு நடத்தி –
சபாநாயகரால் அறிவிக்கப்படும் முடிவில் திருப்தியில்லையெனில் வாக்கெடுப்பை கோரமுடியும். ஆனால், மஹிந்த அணியினர் வாக்கெடுப்பை கோரவில்லை. பெயர்கூவி வாக்கெடுப்பு நடத்த சபாநாயகர் முற்பட்டபோதும் அதற்கு இடமளிக்கவில்லை.
 
இதையடுத்தே குரல்பதிவின் மூலமும், கண்கண்ட சாட்சியின் அடிப்படையிலும் பிரேரணை நிறைவேற்றப்பட்டது என்ற அறிவிப்பை சபாநாயகர் விடுத்தார்.
 
2011 ஆம் ஆண்டு தற்போதைய சபாநாயகர் கருஜயவால், தகவல் அறியும் உரிமைச்சட்டமூலம் தனிநபர் பிரேரணையாகமுன்வைக்கப்பட்டபோது,
குரல்மூல வாக்கெடுப்பு நடத்தியே அது நிராகரிக்கப்பட்டது. அப்போது இனித்த முறைமை தற்போது கசப்பது ஏன் என்பதே ஜனநாயக விரும்பிகளின் கேள்வியாக இருக்கின்றது.
 
செங்கோல் உரிய இடத்தில் இருக்கவில்லை, நாடாளுமன்ற நடவடிக்கைகளின் பிரகாரம் பிரேரணை நிறைவேற்றப்படவில்லை என மஹிந்த அணியினர் சுட்டிக்காட்டிவருகின்றனர். எனினும், நிலையியற்கட்டளைகளை இடைநிறுத்தும் யோசனை நிறைவேற்றப்பட்டு உரிய வகையிலேயே, சபாநாயகரால் சபை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
 
எனவே, தவறு எந்த பக்கம் என்பதை நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *