நிறைவேற்று அதிகாரத்தின் தாண்டவத்தால் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் – பாதுகாக்க அணிதிரளுமாறு ஐ.தே.க. அறைகூவல்
பொருளாதார நெருக்கடியால் நாட்டு மக்கள் திண்டாடும் நிலையில், அரசியல் குழப்பத்தை மேலும் நீடிக்கவிடாது உடனடியாக தீர்வுகாணுமாறு ஐக்கிய தேசியக்கட்சியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளரும், மேல்மாகாணசபை உறுப்பினருமான சி.வை.பி. ராம், ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துவெளியிட்ட ராம், மேலும் கூறியதாவது,
“ வரலாறுகாணாத வகையில் இலங்கையில் அரசியல் குழப்பநிலை உச்சம்தொட்டுள்ளது. நிறைவேற்று அதிகாரத்துக்கும், சட்டவாக்கத்துக்குமிடையே மோதல் ஏற்பட்டுள்ளதால் நாளுக்கு நாள் பிரச்சினைகள் தலைதூக்க ஆரம்பித்துள்ளன.
அதிஉயர்சபையான பாராளுமன்றம்கூட கேலிக்கூத்து – கோமாளிச்சபையாக மாறியுள்ளது. எம்.பிக்கள் சிலர் வன்முறையாளர்களாக மாறியிருப்பதால் ஒட்டுமொத்த அரசியல் கட்டமைப்புமீதும் தவறான கண்ணோட்டம்விழுந்துள்ளது.
நிலையான அரசாங்கமொன்று இன்மையால் வெளிநாட்டு முதலீடுகள் வீழ்ச்சிகண்டுள்ளன. முதலீட்டாளர்களும் நாட்டைவிட்டு வெளியேறும் அபாயம் காணப்படுகின்றது. சர்வதேச சமூகம்கூட இலங்கையை ‘பயங்கரமான’ நாடு என விமர்சிக்கும் அவலநிலை உருவாகியுள்ளது.
இதை பாரதூரமான பிரச்சினையாக கருதி – தீர்வைக்காணாவிட்டால் அனைத்துலக சமூகம் நடவடிக்கையில் இறங்கும். ஜனநாயகம் உறுதிப்படுத்தப்படும்வரை இலங்கைக்கு எதிராக தடைகள் விதிக்கப்படலாம்.
கூட்டுஎதிரணிக்கு பெரும்பான்மை இருக்குமானால் அதை நாடாளுமன்றத்தில் உரிய வகையில் உறுதிப்படுத்தலாம். அதைவிடுத்து வன்முறைமூலம் ஆட்சியை பிடிக்க முயன்றதாலேயே அரசியல் குழப்பம் பெரும் புயலாக மாறியுள்ளது. பெரும்பான்மை ஆதரவு இருக்குமானால் – ஜனநாயக வழியில் மாற்றத்தை ஏற்படுத்த எதற்காக தயங்கவேண்டும்?
அதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் ஜனநாயகத்தை படுகொலைசெய்யும் வகையில் நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தியுள்ளார். இதனால், நாட்டு மக்களுக்கே பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அரசியலையும்,
அரசியல்வாதிகளையும் மக்கள் வெறுக்க தொடங்கிவிட்டனர். இந்நிலை நீடிக்குமானால் வெளியில் தலைகாட்ட முடியாதநிலை ஏற்படும்.
எனவே, கட்சி, சுயநல அரசியலை கைவிடுத்து – நாடு குறித்தும் மக்கள் தொடர்பிலும் சிந்தித்து அரசமைப்பின் பிரகாரம் செயற்பட ஜனாதிபதி முன்வரவேண்டும். அரசியல் குழப்பத்துக்கு முடிவுகட்ட வேண்டும். இதற்கு ஏனைய தரப்பும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும். இதைவிடுத்து அதிகார மோதலில் ஈடுபட்டால் அது நாட்டுக்கு அபசகுணமாகவே அமையும்.
ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அதை கைகட்டிவேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கமுடியாது. எனவே, சர்வமதங்களும் இதுவிடயத்தில் தலையிடவேண்டும்.” என்றார் சி.வை.பி.ராம்.