பிரதமர் பதவிக்கு அருகதையற்றவர் மஹிந்த! – நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு மதிப்பளித்து உடன் பதவி விலகவேண்டுமென சம்பந்தன் வலியுறுத்து

“புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மீதும், அவர் தலைமையிலான அமைச்சரவை மீதும் நம்பிக்கையில்லை என்ற தீர்மானம் மூன்றாவது தடவையாகவும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே, இனியாவது மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும். அவர் தலைமையிலான அமைச்சரவையும் கலைக்கப்படவேண்டும். மஹிந்த அரசு தொடர்ந்து ஆட்சி செய்வதற்கு எவ்விதமான உரிமையும் – அருகதையும் இல்லை.”

– இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

“மஹிந்த அரச தரப்பினர் உடன் பதவி விலகாவிடின் அது சட்டத்துக்கு விரோதமானது; அரசியல் சாசனத்துக்கு விரோதமானது; ஜனநாயகத்துக்கு விரோதமானது. எனவே, இந்த அராஜகங்கள் உடன் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும்” எனவும் அவர் வலியுறுத்தினார்.

நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று மதியம் ஊடகவியலாளர்களைச் சந்தித்து கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இன்று நாடாளுமன்றத்தில் அரங்கேறிய மஹிந்த அணியினரின் அட்டூழியங்களை நீங்கள் (ஊடகவியலாளர்கள்) எல்லோரும் நேரில் பார்த்திருப்பீர்கள். இவை எமது நாட்டுக்கு சர்வதேச ரீதியில் களங்கத்தை ஏற்படுத்தும் கேவலமான செயல்கள்.

கடந்த மாதம் 26ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஷவை அரசமைப்புக்கு முரணாக வகையில் பிரதமராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்திருந்தார். அத்துடன், மஹிந்த தலைமையில் புதிய அமைச்சரவையும் நியமிக்கப்பட்டது. ஆனால், மஹிந்த அரச தரப்பினரால் பெரும்பான்மைப் பலத்தை நிரூபிக்க முடியாமல் போனது. இதை நாடாளுமன்றத்தில் நிரூபித்துக் காட்டுவதற்காகப் பல கோடி ரூபாக்களைக் கொடுத்து எம்.பிக்களை விலைக்கு வாங்கும் நடவடிக்கையில் அவர்கள் இறங்கினார்கள். அப்படி செய்தும் கூட அவர்களால் பெரும்பான்மைப்பலத்தை நிரூபிக்க முடியாமல் போய்விட்டது. 113 உறுப்பினர்களை அவர்களால் சேர்த்துக்கொள்ள முடியவில்லை.

இந்நிலையில், நேற்றுமுன்தினம் புதன்கிழமை புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும், அவர் தலைமையிலான புதிய அமைச்சரவையும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் மூலம் தோற்கடிப்பட்டது. அந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் 122 எம்.பிக்கள் கையெழுத்திட்டு அதன் பிரதியை சபாநாயகர் ஊடாக ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்தார்கள். ஆனால், ஜனாதிபதி எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மஹிந்த அரசை தொடர்ந்து ஆட்சி செய்ய அனுமதித்தார்.

நேற்று வியாழக்கிழமை நாடாளுமன்றம் மீண்டும் கூடியபோது மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றினார். அந்த உரை மீதும், அவரின் பதவி மீதும், அவரின் அரசு மீதும் இரண்டாவது தடவையாகவும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நேற்றுமுன்தினமும் நேற்றும் நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட குழப்பங்களினால் இந்த இரண்டு நம்பிக்கையில்லாத் தீர்மானங்களும் குரல் பதிவு வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன. இதனால் பெயர்கூவி வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற முடிவுக்கமைய நாடாளுமன்றம் இன்று காலை 10 மணிக்குக் கூடியது.

ஆனால், சபாநாயகரை சபைக்கு வர விடாமல் மஹிந்த அணியினர் பல்வேறு வடிவங்களில் படுகேவலமான செயல்களைப் புரிந்தனர். சபாநாயகரின் வருகையை அவர்கள் தடுத்தார்கள்.

இருந்தபோதிலும்கூட தாமதமாக பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் சபாநாயகர் சபைக்கு வந்தார். மஹிந்த அணியினரின் அட்டூழியங்களுக்கு மத்தியில் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மீதும், அவர் தலைமையிலான அமைச்சரவை மீதும் நம்பிக்கையில்லை என்ற தீர்மானம் இன்று மூன்றாவது தடவையாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

எனவே, இனியாவது மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும். நாடாளுமன்றத் தீர்மானத்தின் ஊடாக அவர் பிரதமர் பதவியிலிருந்து விலக்கப்பட்டுள்ளார். பிரதமர் பதவியைத் தொடர்ந்து வகிப்பதற்கு அவருக்கு எவ்விதமான உரிமையும் – அருகதையும் இல்லை.

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அமைச்சரவையும் உடன் கலைக்கப்படவேண்டும். அந்த அமைச்சரவையில் உள்ளவர்களும் தொடர்ந்து பதவி வகிப்பதற்கு எவ்விதமான உரிமையும் – அருகதையும் இல்லாதவர்கள்.

மஹிந்தவும் அவர் தலைமையிலான அமைச்சர்களும் தோற்கடிக்கப்பட்டுள்ளார்கள். எனவே, அவர்கள் தங்கள் பதவிகளை உடன் இராஜிநாமா செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் செய்யாவிட்டால் ஜனநாயக விரோதிகளாவே கருத்தப்படுவார்கள்.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப்பலம் இல்லாதவர்கள் பிரதமராகவே அல்லது அமைச்சர்களாவோ பதவி வகிக்க முடியாது. அவர்கள் நாட்டை ஆட்சி செய்ய முடியாது. அவர்கள் உடன் பதவி விலகாவிடின் அது சட்டத்துக்கு விரோதமானது; அரசியல் சாசனத்துக்கு விரோதமானது; ஜனநாயகத்துக்கு விரோதமானது. எனவே, இந்த அராஜகங்கள் உடன் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *