பகலைப்போல இரவில் படமெடுக்கும் வசதி – கூகுள் அறிமுகம்

இரவு நேரத்திலோ அல்லது குறைந்த ஒளி கொண்ட இடத்திலோ புகைப்படங்களை எடுக்கும்போது இருக்கும் சிரமத்தை பெருமளவில் நீக்கும் தொழில்நுட்பத்தை கூகுள் நிறுவனம் முதல் முறையாக அறிமுகப்படுத்தியுள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை தொழில்முறை கேமராக்களில் மட்டுமே எடுக்க முடிந்த தரமான புகைப்படங்கள்/ காணொளிகளை தற்போது கைபேசிகளிலேயே எடுக்குமளவுக்கு தொழில்நுட்பம் முன்னேறியுள்ளது.

இருந்தபோதிலும், இரவு அல்லது ஒளி குறைந்த இடங்களில் புகைப்படங்களை எடுக்கும்போது தெளிவான புகைப்படங்களை பெறுவதில் சிரமம் நீடித்து வருகிறது. கைபேசியிலுள்ள பிளாஷை பயன்படுத்தி எடுக்கப்படும் புகைப்படங்களும் செயற்கையான தோற்றத்தையே அளிக்கின்றன.

இந்நிலையில், தமது பிக்ஸல் கைபேசிகளில் இருக்கும் கேமராக்களுக்கென ‘நைட் சைட்’ என்னும் பிரத்யேக வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது கூகுள். அதாவது, இயந்திர நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டு செயல்படும் இந்த வசதியின் மூலம் அனைத்து விதமான ஒளியிலும் பளிச்சென வண்ணமயமான புகைப்படங்களை எடுக்கமுடியுமென்று கூகுள் அறிக்கை வெளியிட்டுள்ளது.

சமீபத்திய வரவான பிக்ஸல் 3, சென்றாண்டு வெளியிடப்பட்ட பிக்ஸல், முதலாவதாக வெளியிடப்பட்ட பிக்ஸல் ஆகிய மூன்று மாடல்களுக்கும் இந்த வசதி அளிக்கப்பட்டுள்ளதாக கூறும் கூகுள், “இந்த வசதியை பயன்படுத்தி நீங்கள் புகைப்படத்தை எடுக்கும்போது மட்டுமல்லாது, எடுப்பதற்கு ஒரு சில நிமிடங்கள் முன்பும், சில நொடிகளுக்கு பின்பும் கேமரா முன்பு நிற்பவர் அசையாமல் இருக்க வேண்டும்” என்றும் அறிவுறுத்தியுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *