துணிவிருந்தால் ஜனாதிபதித் தேர்தலை நடத்துங்கள் – மைத்திரிக்கு ஹக்கீம் பகிரங்க சவால்!

ஜனாதிபதிக்கு துணிச்சல் இருந்தால், பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலை நடாத்தி, அதில் போட்டியிட்டு வெற்றிபெற்றுக் காட்டுங்கள் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் சவால் விடுத்தார்.

இன்று (15) வியாழக்கிழமை கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் நடைபெற்ற
ஐக்கிய தேசிய முன்னணியில் ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றி ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது;
ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைப்பதற்கு முன்னர், உயர் நீதிமன்றத்தின் ஆலோசனையைப் பெற்றிருக்கலாம். ஆனால், சட்டத்துறையில் போதிய தெளிவில்லாத பாமர சட்டத்தரணிகளின் பேச்சைக் கேட்டு பாராளுமன்றத்தை அவரசரப்பட்டு கலைத்துவிட்டார். அவர் இப்போது பின்நோக்கிச் செல்லமுடியாமல் திண்டாடிக்கொண்டிருக்கிறார்.
2/3 பெரும்பான்மையின்றி நான்கரை வருடங்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தை கலைக்கமுடியாது. அப்படியிருந்தும் ஜனாதிபதிக்கு அரசியலமைப்பில் இன்னுமொரு வாய்ப்பு இருக்கிறது. அதாவது, ஜனவரி 8ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதாகும்.
மைத்திரிபால சிறிசேனவுக்கு துணிச்சல் இருந்தால், பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலை நடாத்தி அதில் போட்டியிட்டு வெற்றிபெற்றுக் காட்டுங்கள் என்று நான் சவால் விடுக்கிறேன். அதில் எங்களது பலத்தை நிரூபித்து, மக்கள் பலம் என்னவென்பதை நாங்கள் உங்களுக்கு காட்டுகிறோம்.
எனது 25 வருட அரசியல் வாழ்க்கையில் இன்று (15) பாராளுமன்றத்தில் மிகவும் கீழ்த்தரமான காட்சிகளைக் கண்டேன். தனக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு முகம்கொடுக்கத் திராணியற்ற மஹிந்த ராஜபக்ஷ, பாராளுமன்றத்தில் குழப்பம் விளைவித்து, அடித்து ஆட்சியைப் பெறுமாறு தனது சகாக்களை ஏவிவிட்டு மெதுவாக நழுவிச் சென்றார்.
பாராளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றும்போது, மக்களது இறைமையை மதித்து பொதுத் தேர்தலை நடத்துமாறு கூறினார். நாங்கள் சொல்கின்றோம், மக்கள் இறைமையை பாதுகாக்க வேண்டுமானால் முதலில் நடாத்த வேண்டியது ஜனாதிபதி தேர்தலாகும். பொதுத் தேர்தலுக்கு முன் ஜனாதிபதி தேர்தலை நடாத்தி மக்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்பதைப் பாருங்கள்.
மஹிந்த ராஜபக்ஷவுக்கு நான் நன்றிகூற கடமைப்பட்டுள்ளேன். ஏனென்றால், நாட்டில் அரசியல் பிரச்சினையொன்றுக்கு வழிசமைத்து, ஜனநாயகத்துக்கு விரோதமாக செயற்பட்ட காரணத்தினால் மெதமுலான மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையை இழந்துள்ளனர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸையும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸையும் இலகுவாக காவுகொள்ளலாம் என்று அவர்கள் நினைத்துக்கொண்டிருந்தார்கள். ஆனால், எங்களின் 12 பாராளுமன்ற உறுப்பினர்களையும் உங்களிடம் பறிகொடுக்காமல் பாதுகாத்துக் கொள்ளமுடிந்தமைக்கு பெருமைப்படுகிறோம்.
இந்த நாட்டிலே 9 ஆண்டுகளாக இந்த நாட்டில் நடைபெற்ற கொடூர ஆட்சியை முடிவுக்கு கொண்டுவருவதற்கு மக்கள் எங்களுக்கு வழங்கிய ஆணையை பாதுகாத்துள்ளோம். ஜனநாயகத்துக்கு விரோதமான ஜனாதிபதியின் செயற்பாடுகளை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என்பதையும் தெளிவாக சொல்லிக்கொள்கிறோம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *