வடிவேல் சுரேஸ் ஐ.தே.கவில் மீண்டும் சங்கமித்தது எப்படி? சபையில் நடந்து இதோ!

ஐக்கிய தேசியக்கட்சியிலிருந்து மஹிந்த பக்கம் தாவிய வடிவேல்சுரேஸ் எம்.பி., இன்று மீண்டும் ஐ.தே.கவுடன் சங்கமித்ததுடன், பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சுப் பதவியையும் துறந்தார்.


நாடாளுமன்றமானது பெரும் பரபரப்புக்கு மத்தியில் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடியது.

ஆரம்பம் முதல் சபை ஒத்திவைக்கப்படும்வரை அவைக்குள் அமளி துமளி நீடித்தது. இதனால் கூச்சல் குழப்பத்துக்கு மத்தியிலேயே வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் புதிய அரசுக்கு எதிராக ஜே.வி.பியால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்பட்டகையோடு கொழும்பு அரசியலில் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக மஹிந்தபக்கம் குத்துக்கரணமடித்தவர்கள் மீண்டும் தமது கட்சியை நோக்கி நடையைக் கட்டிவருகின்றனர்.

நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்ட பின்னர், சபை வளாகமானது பெரும் பரபரப்பாகவே காட்சிதந்தது. ஐக்கிய தேசியக்கட்சியினதும், அதன் பங்காளிக்கட்சிகளினதும் எம்.பிக்கள், குழுஅறைகளை நோக்கி படையெடுத்தனர்.

அவ்வேளையில், ரவிகருணாநாயக்க, ஹரின் பெர்ணான்டோ ஆகியோருக்கு அழைப்பை ஏற்படுத்திய வடிவேல்சுரேஸ் எம்.பி., தாம் மீண்டும் ஐ.தே.கவுக்கு ஆதரவளிக்கும் நிலைப்பாட்டை அறிவித்தார்.

இதையடுத்து அவசரமாக இயங்கிய ரவிகருணாநாயக்க, திகாம்பரத்துடன் வடிவேலை தொலைபேசியூடாக பேசவைத்தார். மனோ கணேசனுடன் ஹரின் கலந்துரையாடினார்.

குழு அறைக்கு முன்னால் இவ்வாறு சந்திப்பு நடந்துக்கொண்டிருக்கையில், மின்உயர்த்திமூலம் அவ்விடத்துக்கு வந்த சுரேஸை ஐ.தே.க. உறுப்பினர்கள் வரவேற்றனர்.

அதன்பின்னர் ஊடகவியலாளர் மாநாடு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. பின்வரிசையில் அமர்ந்திருந்த வடிவேல் சுரேஸை, சஜித் பிரேமதாஸ முன்வரிசைக்கு அழைத்தார். அவ்வேளையில் ரணிலுடன் ஏதோ இரகசியம் பேசினார்.
ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துவெளியிட்டிருந்தாலும், தனிப்பட்ட ரீதியில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுவதை வடிவேல் சுரேஸ் தவிரித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *