நாடாளுமன்றை கேலிக்கூத்தாக்கிவிட்டார் சபாநாயகர் – சரமாரியாக சொற்கணைகளைத் தொடுக்கிறது மஹிந்த அணி!

சபாநாயகர் கருஜயசூரிய நாடாளுமன்ற சம்பிரதாயத்தை கேலிக்கூத்தாக்கிவிட்டார் என்று மஹிந்த அணி விமர்சித்துள்ளது. மீன்கடையில் வாக்கெடுப்பு நடத்தப்படுவதுபோல், நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பை ஏற்கப்போவதில்லை என்றும் அவ்வணி அறிவித்துள்ளது.

 

நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்ட பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே நிமல் சிறிபாலடி சில்வா மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

“ நாடாளுமன்றத்தில் ஜனநாயகத்துக்கு முரணான வகையிலேயே வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. எத்தனைபேர் ஆதரவு, எத்தனைபேர் எதிர்ப்பு என்றுகூட தெரியாது. மீன்கடையில் வாக்கெடுப்பு நடத்தப்படுவதுபோல், வாக்கெடுப்பொன்றை அதிஉயர் சபையில் நடத்தி நாடாளுமன்ற சம்பிரதாயத்தை சபாநாயகர் கேலிக்கூத்தாக்கிவிட்டார்.அரசமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி எடுத்த முடிவை அவர் சவாலுக்குட்படுத்தியுள்ளார்” என்றும் கூறினார்.

அதேவேளை, இதன்போது கருத்து வெளியிட்ட தினேஸ் குணவர்தன,

“ ஐக்கிய தேசியக்கட்சியின் உறுப்பினராகவே சபாநாயகர் இன்று செயற்பட்டார். சபாநாயகருக்குரிய கோட்பாட்டை அவர் மீறிவிட்டார். நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட முறைமைக்கு அமைய வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை. இதற்கு எதிராக நாம் போராடுவோம்” – என்றார்.

“ நாடாளுமன்றம்கூடியவேளை மேற்குலக நாடுகளில் தூதுவர்கள் கண்காணிப்புக்காக எதற்காக நாடாளுமன்றம் வந்தார்கள்? அல்ஜெசிரா, பிபிசி ஆகியவற்றின் செய்தியாளர்கள் நாடாளுமன்றத்துக்கே வந்திருந்தனர். இதன்நோக்கம் என்ன?” என்று விமல்வீரவன்ஸ கேள்வி எழுப்பினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *