அனைத்து தமிழ்க் கட்சிகளையும் ஒன்றிணைக்கின்றார் சம்பந்தன்!

தென்னிலங்கை கட்சிகள், அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ளும் போட்டியில் குதித்துள்ள நிலையில், பொதுத்தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னர், சகல தமிழ்க் கட்சிகளையும் ஓரணியின் கீழ் கொண்டு வருவதற்கு முயற்சிப்பேன் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது:-

“தெற்கு அரசு இந்நாட்டிலிருக்கும் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக, தங்களுடைய அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ளல், அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொள்ளல் எவ்வாறு என்பது தொடர்பிலான சிந்தனையிலேயே இருக்கின்றன. அது ஒக்டோபர் 26ஆம் திகதி முதல், இதுவரையிலான காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட நகர்வுகளை வைத்துப் பார்க்கும்போது தெட்டத்தெளிவாகின்றது.

தெற்கில் ஏற்பட்டுள்ள இவ்வாறான துரோகத்தனமான அரசியலுக்குள், நாட்டில் வாழ்கின்ற தமிழ் மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்குமென எதிர்பார்க்க முடியாது. அவர்கள் அதிகாரத்துக்கான தேடலிலேயே ஈடுபட்டுள்ளனர். இந்த அரசியவாதிகள் காலையில் கூறியதை மாலையில் மாற்றிக் கூறுபவர்களாக மாறிவிட்டனர். ஆகையால், இவ்வாறானவர்கள் கூறுவதை நம்பமுடியாது.

அரசியலில் பயணம் செய்யும் போது, அதிகூடிய நம்பிக்கையை கொண்டிருக்க வேண்டும். இது தென்னிலங்கை அரசியல்வாதிகளுக்கு பிரச்சினையாக இல்லாதிருந்தாலும் தமிழ் அரசியல்வாதிகள் மிகவும் ஆழமாக சிந்திக்கவேண்டிய காரணமாகவே உள்ளது.

தென்னிலங்கை அரசியல்வாதிகளிடம், ஒற்றுமை, நம்பிக்கை, தெளிவான எதிர்கால பயணம் இல்லை என்பதால், அவர்களின் செயற்பாடுகள் மிகவும் அற்பதனமானவை. அவ்வாறானவர்கள் மிகவும் கடினமான பயணத்தை மேற்கொள்கின்றனர்.

இவ்வாறான நிலைமைகளை உதாரணமாக எடுத்துக்கொண்டு, சகல பிரச்சினைகளையும் ஒருபுரத்தில் ஒதுக்கி வைத்துவிட்டு, சகல தமிழ்க் கட்சிகளும் ஓரணியில் ஒன்றுதிரள வேண்டும்.

நாடாளுமன்றத் தேர்தல் வந்திருக்கின்றது. இந்நிலைமையில், சகல தமிழ் கட்சிகளின் அரசியல்வாதிகளும் தமிழ் மக்களுக்காக மிகவும் புத்திக்கூர்மையுடன் செயற்படுவதற்கான நல்லதொரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

தெற்கு அரசியலில் ஏற்பட்ட சமீபத்திய காலங்களில் ஏற்பட்டிருந்த உறுதியற்ற தன்மை நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதன் மூலமாக முற்றிலுமாக ஒழிக்கப்படாது என்றும் தெரிகின்றது. தனியொரு கட்சிக்குக் கூடுதலான ஆசனங்களைப் பெற்றுக்கொண்டு, மிகவும் பலம்வாய்ந்த ஆட்சி அதிகாரத்தை அமைப்பதற்கான இயலுமையை இம்முறையும் பெற்றுக்கொள்ளமுடியாது.

ஆகையால், ஆட்சியமைக்கவிருக்கும் பெரும்பான்மை கட்சி, சிறிய கட்சிகளின் ஆதரவை நிச்சயமாக பெற்றுக்கொள்ளவேண்டி வரும். ஆகையால், அவற்றை சகல தமிழ்க் கட்சிகளும் புரிந்துகொள்ளவேண்டும்” – என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *