பொதுத்தேர்தலில் ரணில் வெற்றிபெற்றாலும் மைத்திரி நாடாளுமன்றை கலைப்பார் – இடமளிக்கமுடியாது! மு.காவும் நீதிமன்றை நாடுகிறது!!

பலவந்தமாக பறித்தெடுக்கப்பட்ட ஆட்சியை மீண்டும் அவர்களிடமே ஒப்படைப்பதற்கு நாங்கள் தயாரில்லை. ஜனாதிபதிக்கு பிடிக்காவிட்டால் தொடர்ந்து பிரதமரை மாற்றிக்கொண்டே இருப்பார். இந்நிலையில், பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக நாளை (12) உயர் நீதிமன்றத்தை நாடவுள்ளோம் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகம் தாருஸ்ஸலாமில் இன்று ஞாயிற்றுக்கிழமை (11) நடைபெற்ற கட்சியின் மக்கள் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின்போதே ரவூப் ஹக்கீம் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது;
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சட்டத்துக்கு முரணான வகையில் பிரதமரை நீக்கிவிட்டு, புதிய பிரதமரை நியமித்துள்ளார். தான் செய்த தவறை மூடிமறைப்பதற்காக இன்னுமொரு தவறைச் செய்துள்ளார். இதன் காரணமாகவே பாராளுமன்றத்தை ஒத்திவைத்து, பின்னர் அவசர அவசரமாக அதைக் கலைத்துள்ளார்.
தனக்கு பிரதமரை பிடிக்கவில்லை என்பதற்காக கரு ஜயசூரியவையும், சஜித் பிரேமதாசவையும் பிரதமராக நியமிப்பதற்கு விருப்பம் கேட்டதாக ஜனாதிபதியே தெரிவித்துள்ளார். அவருக்கு பிடிக்கவில்லை என்பதற்காக, மக்கள் ஆணையை மதிக்காமல் பிரதமரை மாற்றும் சங்கீதக் கதிரை விளையாட்டை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
அடுத்த வருட தேர்தலிலும் ரணில் விக்கிரமசிங்க வெற்றிபெற்று பிரதமராக வந்தால், ஜனாதிபதி மீண்டும் பாராளுமன்றத்தைக் கலைத்துவிடத்தான் முயற்சிப்பார். ஆகவே, இந்தப் பிரச்சினைக்கு சட்டரீதியாக தீர்வுகாண வேண்டும். அப்படியில்லாவிட்டால், ஜனநாயகம் செத்து இந்த நாட்டை யாருமே காப்பாற்ற முடியாத நிலைக்குச் சென்றுவிடும்.
நாட்டின் ஜனநாயகத்துக்கும், அரசியலமைப்புக்கும் பாரிய சவாலை ஏற்படுத்தும் நோக்கிலேயே ஜனாதிபதியின் அண்மைக்கால செயற்பாடுகள் அமைந்துள்ளன. இதனை கருத்திற்கொண்டு, சட்டத்தை மீறி பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்காக ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து முஸ்லிம் காங்கிரஸும் நாளை உயர் நீதிமன்றத்தை நாடவுள்ளது.
நான் ஜனாதிபதி, மஹிந்த ராஜபக்ஷ, பஷில் ராஜபக்ஷ, கோத்தபய ராஜபக்ஷ, சமல் ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ என எல்லோருடனும் கதைத்துள்ளேன். இதன்போது அவர்கள் நெருக்கடியான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டதை என்னால் அவதானிக்க முடிந்தது. ஒரு மாதத்துக்கு மட்டும் ஆதரவளியுங்கள் அதன் பின்னர் தேர்தலொன்றுக்குச் செல்வோம் என்று கோத்தாபய ராஜபக்ஷ என்னிடம் வினயமாக கேட்டுக்கொண்டார்.
ஆனால், பாராளுமன்றத்தின் மூலம்தான் இதற்கு தீர்வுகாணவேண்டும் என்பதில் நாங்கள் ஒருமித்த முடிவுடன் இருந்தோம். உம்ராவுக்குச் சென்றிருந்த நிலையில், நாங்கள் அவர்களுடன் இணையப்போவதாக்கூறி சில பாராளுமன்ற உறுப்பினர்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சிகளும் நடந்துதான் உள்ளன. இந்த போலியான அறிவிப்புகளை நாங்கள் உடனேயே மறுத்திருந்தோம்.
மஹிந்த ராஜபக்ஷவின் கடந்த ஆட்சிக்காலத்தில் நாங்கள் கற்றுக்கொண்ட பாடங்கள் நிறையவே இருக்கின்றன. அதற்காக நாங்கள் சார்ந்திருக்கும் ஐக்கிய தேசியக் கட்சி எங்களை போடுகாய்களாக பயன்படுத்தவும் அனுமதிக்கமாட்டோம். கண்ணை மூடிக்கொண்டு ஆதரவளிக்காமல் மிகவும் நிதானத்துடனேயே செயற்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் முடிவில் நாட்டின் எதிர்காலமே தங்கியிருக்கும் ஒரு சூழ்நிலை தோன்றியது. அரசியல் நெருக்கடி தோன்றியுள்ள நிலையில் முஸ்லிம் சமூகம் மற்றும் ஜனநாயகத்தை விரும்பும் மக்கள் என எல்லோரும் கட்சியின் முடிவின் மீது நம்பிக்கை வைத்துக்கொண்டிருந்தனர்.
இதேவேளை, அரசியல் அழுத்தங்களுக்கு கட்சியினால் தாக்குப்பிடிக்க முடியாது என்று சிலர் நம்பிக்கொண்டிருந்தனர். இந்நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவருக்கும் கலங்கம் இல்லாதவகையில், புனித மக்கா ஹரம் ஷரீபில் வைத்து கட்சித் தலைமைக்கு கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையின் கட்சியின் கெளரவம் பாதுகாக்கப்பட்டது.
ஜனநாயகத்தை கேள்விக்குட்படுத்தும்போது, வேற்றுமையிலும் ஒற்றுமைகண்டு அரசின் பங்காளிக் கட்சிகள் என்றவகையில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஓரணியில் செயற்படுகிறோம். முஸ்லிம் காங்கிரஸ் எடுக்கின்ற தீர்மானத்தின் பின்னால் இருப்பதற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாத் பதியுதீன் என்னிடம் விருப்பம் தெரிவித்தார்.
உம்ரா கடமையை முடித்துவிட்டு நானும், றிஷாத் பதியுதீனும் மக்காவில் வைத்து தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் தொடர்பாக கூட்டாகவும் தனியாகவும் சந்தித்து பேசினோம். இப்போதையே சூழ்நிலையில் மக்களின் அபிலைாஷைகளை மதித்து, ஜனநாயகத்தை பாதுகாக்கும் நோக்கில் மைத்திரி – மஹிந்த அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பதில்லை என்ற தீர்மானத்தை ஒருமித்து எடுத்துள்ளோம்.
தற்போதைய ஒற்றுமையில் தொடர்ந்து பயணிக்கவேண்டும் என்பதில் றிஷாத் பதியுதீன் ஆர்வமாக இருக்கிறார். இரு கட்சிகளும் இணைந்து செயற்படுவதால் ஏற்படும் சாதக, பாதங்கள் பற்றி விரிவாக ஆராயவேண்டும். இந்த விடயத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் சாமர்த்தியான முறையில் வியூகம் வகுக்கப்படவேண்டும். கட்சியின் உள்நோக்கம் சம்பந்தமாக தவறான எடுகோள்கள் வராமலும் பார்த்துக்கொள்ள வேண்டும்.
இரு கட்சிகளுக்கும் இடையில் இருக்கின்ற சந்தேகங்கள், எடுகோள்களின் அடிப்படையில் முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து செயற்படுவதால் கட்சி சோரம்போய்விட்டதா என்ற சிலரின் அச்சம் நியாயமானது. ஆனால், நாங்கள் முதலில் எங்களுக்குள் நம்பிக்கையுடனும், ஒற்றுமையுடனும் இருக்கவேண்டும். அத்துடன், இரு கட்சிகளும் ஒருமித்து செயற்படுவது தொடர்பாக மக்கள் என்ன நிலைப்பாட்டில் இருக்கிறார்கள் என்பதையும் கவனத்திற்கொள்ள வேண்டும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *