‘1650 பேரை காப்பாற்றினேன்; ஆனால் என்னைக் காப்பாற்ற நாதியில்லை’ – குமுறும் பஞ்சாப் சிங்!

பரீட்சையில் தோற்றது, கடன் தொல்லைகளைச் சமாளிக்க முடியாதது, காதலித்தவர்களை மனம் செய்துகொள்ள முடியாது என ஏதேதோ காரணங்களைச் சொல்லி தற்கொலை செய்துகொள்வார்கள். அப்படி கொடூரமாக தற்கொலை செய்துகொள்பவர்களின் உடல்களைத் தூக்க சொந்தங்களோ, உடன்பிறந்தவர்களோகூட வர மாட்டார்கள். ஆனால், அவ்வாறு இறந்தவர்களின் சடலங்களை எந்த மலை முகடாக இருந்தாலும், ஆழமான நீர்ப் பகுதியாக இருந்தாலும் தூக்கிவந்து இறுதி மரியாதை செய்ய உதவுவார்கள் சிலர். அப்படிப்பட்ட சிலரில் ஒருவர்தான் ஹரியானாவைச் சேர்ந்த பர்கத் சிங்.

41 வயதாகும் இவர், 10 மாடுகளை வைத்துக்கொண்டு பால் விற்கும் தொழில் செய்து பிழைப்பை நடத்திவருகிறார். இதற்கிடையே, பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் நீரில் மூழ்கி தற்கொலை செய்துகொள்பவர்கள், எதிர்பாராத விதமாக விபத்துகளில் சிக்கி உயிரிழந்தோரின் சடலங்களைத் தூக்கிவரும் உதவியையும் செய்துவருகிறார். இரண்டு மாநிலங்களில் எங்கு உயிரிழப்புச் சம்பவங்கள் நடந்தாலும் போலீஸ் உடனடியாக அழைப்பது பர்கத் சிங்கைத்தான். எங்கு உதவி என்று கூப்பிட்டாலும் உடனே அங்கு சென்றுவிடுவார்.    13 வருடங்களாக எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி, ஒரு பைசா கூடப் பெறாமல் இந்த உதவியைச் செய்துவருகிறார். கடந்த 13 வருடங்களாக இதுவரை 11,802 சடலங்களை மீட்டுள்ளார். அதேவேளை, பல்வேறு விபத்துகளில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த 1,650 பேரைக் காப்பாற்றி, அவர்கள் மறு வாழ்க்கை பெற காரணமாகவும் இருந்துள்ளார்.

மனித உயிர்களை மட்டுமல்ல, ஆபத்தான விலங்குகளையும் பலமுறை காப்பாற்றியுள்ளார். மனிதாபிமான அடிப்படையில் இவர் செய்த உதவிக்கு பாராட்டுகள் கிடைத்துள்ளன. தொண்டு நிறுவனங்கள், தனியார் அமைப்புகள் என 275 முறை கௌரவிக்கப்பட்டுள்ளார் பர்கத். ஆனால் இந்தப் பாராட்டும் மரியாதையும் அவருக்கு உதவவில்லை என்பதுதான் பெரும் சோகம்.

ஆம், கடந்த 23-ம் தேதி, உறவினர்களின் வீட்டில் இருந்து தனது வீட்டுக்கு மனைவியுடன் திரும்பிக்கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கிக்கொண்டனர். இந்த விபத்தால் கை, கால்களில் பலத்த காயமடைந்த நிலையில் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துவருகின்றனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தவர்கள் தற்போதுதான் மீண்டுள்ளனர். இருப்பினும், அவரது மனைவிக்கும் அவருக்கும் கால்களில் பலத்த அடிப்பட்டுள்ளதால், இருவருக்கும் மேல் சிகிச்சை செய்யவேண்டியுள்ளது. ஆனால், சிகிச்சைக்குரிய போதுமான பணம் அவரிடம் இல்லை. பணத்துக்காகக் கஷ்டப்படும் அவருக்கு உதவ யாரும் முன்வரவில்லை.

“போன வருஷம் பஞ்சாபில் மூன்று பேர் ஆழமான குளத்தில் மூழ்கி உயிரிழந்துவிட்டனர். அவர்களை மீட்கத் தனியார் நீர் மூழ்குபவர்கள் 5 லட்சம் கேட்டனர். ஆனால் ஒரு பைசா கூட பெறாமல், இலவசமாக அவர்களது உடல்களை நான் மீட்டுக்கொடுத்தேன்.

நேசித்தவர்களின் பிரிவால் வாடும் மக்களிடம் போய் காசு கேட்கக் கூடாது. அது எனக்குப் பிடிக்காது. அதனால், நான் செய்த உதவிகளுக்கு யாரிடமும் பணம் பெற மாட்டேன். ஆனால் இன்று, எனக்கு அவர்களிடம் இருந்து உதவித் தேவைப்படுகிறது. என் மனைவியின் காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இரண்டு வாரங்களாக மருத்துவமனையில் இருக்கிறோம். இதுவரை எங்களைப் பார்க்கக்கூட யாரும் வரவில்லை.

 

இது, என்னை வருத்தத்துக்கு உள்ளாக்குகிறது.” என உருக்கமாகத் தெரிவித்துள்ளார் பர்கத் சிங். விபத்துகளில் சிக்கியவர்களை மீட்பதற்காக போலீஸ், அரசு அதிகாரிகள் பர்கத் சிங்கை அழைத்துவருவார்கள். ஆனால் இன்று, அவருக்கு உதவ அரசோ, அதிகாரிகளோ முன்வராதது அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இந்தச் செய்தி வெளியானதை அடுத்து பொதுமக்கள் அவருக்கு உதவிகள் செய்துவருகின்றனர்.

நன்றி விகடன்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *