எமக்கு ஹில்டர் ஆட்சி வேண்டாம்! மஹிந்தவுக்கு எதிராக பௌத்த பிக்குகள் போர்க்கொடி!! – நாடாளுமன்றத்தை உடன் கூட்டுமாறும் மைத்திரியிடம் வலியுறுத்து

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசமைப்புக்கு அமைவாக செயற்பட வேண்டும் என்றும், நாடாளுமன்றத்தைக் கூட்டி அரசமைப்பு நெருக்கடிக்கு தீர்வு காணுமாறும் வலியுறுத்தி நூற்றுக்கணக்கான பௌத்த பிக்குகள் கொழும்பில் பேரணியில் ஈடுபட்டனர்.

கொழும்பு நகர மண்டபத்தில் நேற்று பிற்பகல் கூடிய பௌத்த பிக்குகள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசமைப்புக்கு அமைவாக செயற்பட வேண்டும் என்றும், நாடாளுமன்றத்தைக் கூட்டி அரசமைப்பு நெருக்கடிக்குத தீர்வு காணுமாறும் தீர்மானம் நிறைவேற்றினர்.

“மகா சங்கத்தின் இந்தத் தீர்மானம், ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக பதவிக்குக் கொண்டு வருவதற்கு அல்ல, ஜனநாயகத்தைப் பாதுகாக்கவே கொண்டு வரப்பட்டுள்ளது” என்று வண. ஹடிகல்லே விமலசார தேரர் தெரிவித்தார்.

“நாட்டில் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதே துறவிகளான எமது கடமை. நாடு நெருக்கடியான நிலையில் இருந்த போதெல்லாம், பௌத்த பிக்குகள், அரச தலைவர்களுக்கு வழிகாட்டிகளாக இருந்து சரியான வழியில் செல்வதற்கு உதவியுள்ளனர்” என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேவிதமான கருத்தை வெளியிட்ட வண.பத்தரமுல்ல தயாவன்ச தேரர், நாட்டில் அமைதியையும், இயல்பு நிலையையும் உருவாக்க ஒத்துழைப்பது பௌத்த பிக்குகளின் கடமை என்று குறிப்பிட்டுள்ளார்.

“நாட்டில் ஜனநாயக ஆட்சியே தேவை. எமக்கு ஹில்டர் ஆட்சி தேவையில்லை” என்று என்று வண. போபிட்டிய தம்மசார தேரர் கூறியுள்ளார்.

அதேவேளை, தாம், சபாநாயகர் கரு ஜயசூரியவையும், சஜித் பிரேமதாஸவையும் பிரதமராகப் பதவியேற்குமாறு கோரியதாகவும், அவர்கள் நிராகரித்த பின்னரே, மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்ததாகவும் ஜனாதிபதி மைத்திரி கூறியுள்ள கருத்தை வண. தம்பர அமில தேரர் நிராகரித்துள்ளார்.

“கரு ஜயசூரியவையும், சஜித் பிரேமதாஸவையும் பிரதமர் பதவியை எற்றுக் கொள்ளுமாறு நான்கு மாதங்களுக்கு முன்னர் கோரியதாக ஜனாதிபதி கூறியுள்ளார். இதனை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது.

ஏனென்றால், தன்னைக் கொல்லும் சதித் திட்டம் காரணமாகவே ரணில் விக்கிரமசிங்கவை பதவி நீக்கியதாக அவர் கூறியிருந்தார். ஆனால், கொலைச் சதி முயற்சி அண்மையில் நடந்த விவகாரம். அதற்கு முன்னரே, கரு ஜயசூரியவையும், சஜித் பிரேமதாஸவையும் பிரதமர் பதவியை ஏற்குமாறு அழைத்திருப்பது எப்படி?

தற்போதைய அரசியல் நெருக்கடி நீடித்தால் சர்வதேச சமூகம் கடுமையான நடவடிக்கையில் இறங்கக்கூடும்” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *