நடுநிலை வகியுங்கள்! – கூட்டமைப்பிடம் கெஞ்சினார் மைத்திரி; அடியோடு நிராகரித்தது சம்பந்தன் குழு

நாடாளுமன்றத்தில் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரும்போது அதற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டாம் எனவும், பிரேரணையை எதிர்த்து வாக்களிக்குமாறும் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பிக்களிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று நேரில் கேட்டுக்கொண்டார். ஆனால், இந்த வேண்டுகோளுக்கு இணங்கமாட்டோம் என்று கூட்டமைப்பினர் தெரிவித்தபோது, நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களிக்க முடியாவிட்டால் அதனை ஆதரிக்காமல் நடுநிலையாவது வகியுங்கள் எனவும் ஜனாதிபதி கோரிக்கை விடுத்தார். எனினும், ஜனாதிபதியின் இந்தக் கோரிக்கையை அடியோடு நிராகரித்த கூட்டமைப்பு எம்.பிக்கள், “புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்க முடிவெடுத்த நாம் அவருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாகவே வாக்களிப்போம்” எனவும் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் (ரெலோ), த.சித்தார்த்தன் (புளொட்), எம்.ஏ.சுமந்திரன் (தமிழரசுக் கட்சி) ஆகியோர் ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி செயலகத்தில் இன்று சந்தித்துக் கலந்துரையாடினர். இந்தச் சந்திப்பு சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் நடைபெற்றன.

நாட்டில் தற்போது நிலவும் அரசியல் குழப்ப நிலைமை தொடர்பில் மிக நீண்ட கலந்துரையாடல் நடைபெற்றது. இதன்போது ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கியமை, புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை நியமித்தமை உள்ளிட்ட சில முடிவுகள் எடுக்கப்பட்டதன் பின்னணி குறித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் குழுவினருக்கு ஜனாதிபதி விளக்கமளித்தார்.

புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரிக்காமல் எதிர்த்து வாக்களிக்குமாறு கூட்டமைப்பின் எம்.பிக்களிடம் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார். அல்லது வாக்கெடுப்பின்போது நடுநிலை வகிக்குமாறும் அவர் கோரினார். எனினும், ஜனாதிபதியின் கோரிக்கைகளை அடியோடு நிராகரித்த கூட்டமைப்பினர், அரசமைப்புக்கு முரணாக நியமிக்கப்பட்டுள்ள புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை நாடாளுமன்றத்தில் தாம் எதிர்ப்போம் எனவும், அவருக்கு எதிராகக் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாகவே தாம் வாக்களிப்போம் எனவும் தெரிவித்தனர்.

எனினும், நடுநிலையாவது வகிக்குமாறு கூட்டமைப்பினரிடம் ஜனாதிபதி திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டார்.

இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழுவினராலும் அதன் நாடாளுமன்ற உறுப்பினர்களாலும் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கான காரணங்களை கூட்டமைப்பு எம்.பிக்கள் குழுவினர் ஜனாதிபதிக்கு எடுத்துக்கூறினர்.

இந்தத் தீர்மானங்கள் ஏற்கனவே பகிரங்கமாக முழு நாட்டுக்கும் உலகுக்கும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன எனவும், தாம் ஏற்கனவே எடுத்த தீர்மானங்களை மாற்ற முடியாது எனவும், அந்தத் தீர்மானங்களின்படியே தாம் செயற்படுவோம் எனவும் ஜனாதிபதியிடம் கூட்டமைப்பு எம்.பிக்கள் விளக்கிக் கூறினர்.

நாடாளுமன்றத்தை இம்மாதம் 14ஆம் திகதி வரை ஒத்திவைத்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், பெரும்பான்மையான எம்.பிக்களின் எழுத்து மூல வேண்டுகோளுக்கிணங்க சபையை முற்கூட்டியே கூட்டுவதற்கு அனுமதிக்குமாறும் இதன்போது ஜனாதிபதியிடம் கூட்டமைப்பினர் வலியுறுத்தினர்.

இந்த வேண்டுகோளை தான் கவனமாக ஆராய்வதாக ஜனாதிபதி உறுதியளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *