அமெரிக்காவின் பொருளாதாரத் தடையை வெற்றிகரமாக முறியடிப்போம்! – ஈரான் அறிவிப்பு

அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகளை வெற்றிகரமாக முறியடிப்போம் என்று ஈரான் அரசு அறிவித்துள்ளது.

அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளுக்கும், எண்ணெய் வளம் மிகுந்த ஈரானுக்கும் இடையே 2015ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது. ஆனால் இந்த ஒப்பந்தத்தின்படி ஈரான் செயல்படவில்லை என்று கூறி கடந்த மே மாதம் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ஈரானுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்தார்.

மேலும் நவம்பர் 4ஆம் திகதிக்கு (நேற்றுமுன்தினம்) பிறகு ஈரானிடம் இருந்து எந்த நாடும் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யக் கூடாது என்றும் மீறினால் அந்த நாடுகள் மீதும் பொருளாதார தடை விதிக்கப்படும் எனவும் டிரம்ப் அறிவித்தார்.

எனினும் அண்மையில், இந்தியா, சீனா, ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட 8 நாடுகளுக்கு தற்காலிகமாக ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய அமெரிக்கா அனுமதித்தது.

இந்தநிலையில் இதுவரை இல்லாத அளவிற்கு ஈரான் மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடையை நேற்று விதித்தது. அதன்படி 600க்கும் மேற்பட்ட தனி நபர்கள், நிறுவனங்கள், கப்பல்கள், விமானங்கள், முக்கிய வங்கிகள், எண்ணெய் ஏற்றுமதி நிறுவனங்கள் ஆகியவற்றின் மீது தடை விதிக்கப்பட்டது.

இதையும் மீறி ஈரானுடன் இணைந்து செயல்படும் ஐரோப்பிய, ஆசிய நாடுகள் மற்றும் அவற்றின் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. அமெரிக்காவின் இந்த கடும் நடவடிக்கையால் எண்ணெய் ஏற்றுமதி, வர்த்தக போக்குவரத்து, வணிகம் என்று அனைத்து விதத்திலும் ஈரானின் பொருளாதாரம் மிகக் கடுமையாக பாதிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

இந்தநிலையில் அமெரிக்கா விதித்துள்ள இந்த தடை காரணமாக 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஈரானிடம் இருந்து விலகி உள்ளன.

அமெரிக்கா விதித்துள்ள இந்த தடைகள் உடனடியாக அமலுக்கு வந்தன. டிரம்ப் அறிவித்துள்ள பொருளாதார தடைகளால் ஈரான் கொதித்து எழுந்துள்ளது. இதுபற்றி ஈரான் அதிபர் ஹசன் ரவுஹானி கூறியதாவது:-

“நீங்கள் அறிவித்துள்ள (அமெரிக்கா) சட்டவிரோத பொருளாதார தடைகளை வெற்றிகரமாக முறியடிப்போம். ஏனெனில் நீங்கள் அறிவித்து இருப்பது சர்வதேச சட்ட விதிமுறைகளுக்கு எதிரானது. இப்போது நாங்கள் ஒரு ஆதிக்க சக்தியுடன் பொருளாதார போரை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம்.

இதுபோன்று அமெரிக்க வரலாற்றில் நிகழும் என்று நான் ஒருபோதும் நினைத்து இல்லை. இது யாரோ ஒருவர் சட்டத்தையும், சர்வதேச மரபுகளையும் மீறி வெள்ளை மாளிகைக்குள் நுழைந்திருப்பது போல் உள்ளது.

நாம் அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து சமரசம் பேசுவோம் என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருந்தீர்கள். அதுபோல் நடந்ததா? முதலில் ஏற்கனவே நடந்த பேச்சு வார்த்தைகளுக்கு நீங்கள் மதிப்பளியுங்கள்” என்று அவர் கூறினார்.

இந்த நிலையில் அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோவிடம் நிருபர்கள் சீனாவும், இந்தியாவும் 6 மாதத்துக்குள் ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை முற்றிலுமாக நிறுத்தாவிட்டால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும்? என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு இரு நாடுகளின் பெயரை நேரடியாக குறிப்பிடாமல் பாம்பியோ கூறுகையில், “அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடை நடைமுறைக்கு வந்துவிட்டது. ஏற்கனவே ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியை கணிசமாக குறைத்து உள்ளோம். இது ஜனாதிபதி டிரம்பிற்கு கிடைத்துள்ள வெற்றியாகும். ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியை பூஜ்ய நிலைக்கு கொண்டு செல்லும் வரை அமெரிக்கா ஓயாது. நாங்கள் என்ன செய்யப் போகிறோம் என்பதை பொறுத்திருந்து பாருங்கள்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *