எம்.பிக்களை விலைக்கு வாங்காதீர்கள்! நாடாளுமன்றத்தை உடன் கூட்டுங்கள்!! – மைத்திரியிடம் நேரில் கோரினார் சம்பந்தன்

“இலங்கை ஜனநாயக நாடு. இது சர்வாதிகார நாடு அல்ல. எனவே, நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் கேவலமான நடவடிக்கையை நிறுத்திவிட்டு நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுங்கள். நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டுங்கள்.”

– இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேரில் கோரிக்கை விடுத்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் தமிழ்த் தேசியத் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும் இடையில் விசேட சந்திப்பு நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடந்தது. இதன்போதே சம்பந்தன் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.

நேற்று மாலை நடந்த இந்தச் சந்திப்பில் ஜனாதிபதியால் வழங்கப்பட்ட புதிய பிரதமர் நியமனம் மற்றும் நாடாளுமன்ற அமர்வு ஒத்திவைக்கப்பட்டமை தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டது.

“புதிய பிரதமர் நியமனம், நாடாளுமன்றம் ஒத்திவைப்பு, எம்.பிக்களை விலைக்கு வாங்குதல் ஆகியவை சட்டத்துக்கு முரணானவை. இவை ஜனநாயகத்துக்கு விரோதமானவை. இவற்றை நாம் ஒருபோதும் ஏற்கமாட்டோம். நாட்டில் சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்படவேண்டும்” என்றும் இரா. சம்பந்தன், ஜனாதிபதியிடம் இதன்போது எடுத்துரைத்தார்.

தான் அரசமைப்புக்கு உட்பட்டே அனைத்தையும் செய்வதாக ஜனாதிபதி இதன்போது சம்பந்தனிடம் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *