Local

சிவசக்தி ஆனந்தனைப் போன்று சோரம் போபவன் நான் அல்லன்! – சரவணபவன் எம்.பி. சாட்டையடி

“நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனைப் போன்றோ அவரது கட்சியைப் போன்றோ பணத்துக்கும் பதவிக்கும் சோரம் போபவன் நான் அல்லன்.”

– இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன்.

மஹிந்த அணிக்குத் தான் தாவி அமைச்சுப் பதவியையும் பணத்தையும் பெறவுள்ளார் என சிவசக்தி ஆனந்தன் எம்.பி. சுமத்தியுள்ள குற்றச்சாட்டுத் தொடர்பில் சரவணபவன் எம்.பி. விளக்கமளித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:-

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள தற்போதைய அரசியல் குழப்ப நிலையில் நான் மஹிந்த பக்கம் தாவுவேனா? இல்லையா? என்கிற சந்தேகம் மக்களுக்கு இருக்கக்கூடும். முன்னாள் கொலைகார இயக்கத்தைச் சேர்ந்த சிலர் தம்மைப்போலவே பிறரையும் கருதி உருவாக்கிவிட்ட வதந்தி அது.

நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கூறுவதைப் போன்று மஹிந்த பக்கம் செல்வது பற்றிச் சிந்திப்பதைக்கூட ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனக்கு. வாழ்வில் ஒருபோதும் கொள்கையைக் கைவிட்டு வசதிகளுக்கும் வாய்ப்புகளுக்கும் விலைபோகக் கூடியவன் அல்லன் நான். அத்தகையவனாக இருப்பேனாகில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பெரும் நிதி இழப்புக்கும் பொருள், சொத்திழப்புக்கும் மத்தியில் எனது ‘உதயன்’ பத்திரிகையை நடத்தியிருக்கவேண்டிய அவசியம் ஏதுமில்லை.

இத்தனை வருட காலங்களில் தமிழ் மக்களுக்கு தமிழ்த் தேசியம் குறித்து எனது பத்திரிகை எதைக் கூறியதோ எதைச் சொல்லியதோ அதுவே எனது என்றென்றைக்கும் மாறாத ஒரே கொள்கை.

தமிழ்த் தேசியம் பேசிக் கொண்டு, விடுதலை இயக்கமாக உருவாகிப் பின்னர் தமது சொந்த மக்களையே கொன்று குவித்தும் கடத்திக் கப்பம் வாங்கியும் பிழைப்பு நடத்திய ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு, கொண்ட கொள்கையில் இருந்து தவறி விழுவதும் போலித் தேசியம் பேசிக் கொண்டே சிங்களப் பேரினவாதத் தலைவர்களுடன் கொஞ்சிப் குலாவுவதும் சாதாரணமான விடயமாக இருக்கலாம். ஏனெனில் அவர்கள் கடந்த காலங்களிலும் இதுபோன்ற மக்கள் துரோகச் செயல்களைப் புரிந்து பழக்கப்பட்டவர்கள்.

ஆனால், நான் இந்த மண்ணிலேயே கடந்த 30 ஆண்டுகளாக மக்களோடு மக்களாக இருந்து சிங்கள, பௌத்த பேரினவாதத்தை எதிர்த்து தமிழ்த் தேசியத்தின் ஆணிவேராக ஒரு பத்திரிகையை நடத்தி நின்றவன். ஒரு சில கோடிகளும் அமைச்சுப் பதவிகளும் என் கால் தூசுக்குப் பெறா.

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியின் மூலம் வரும் பணத்தை எதிர்பார்த்து வாழும் நிலையை ஆண்டவன் எனக்கு ஒருபோதும் வைத்ததுமில்லை.

அமைச்சுப் பதவிக்கும், பணத்திற்கும், பத்திரிகையை நடத்துவதற்கான வசதிகளுக்காகவும் நான் மஹிந்தவுடன் பேரம் பேசினேன் என்று வெட்கங்கெட்டத்தனமாக சிவசக்தி ஆனந்தன் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய குரல் பதிவில் தெரிவித்திருக்கிறார். உண்மையில் மஹிந்தவுடன் பேரம் பேசியவர்கள் இவர்கள்தான். பின்னர் ரணிலுடனும் பேரம் பேசித் தமது கட்சித் தாவலைத் தள்ளிப் போட்டிருப்பவர்களும் இவர்கள்தான்.

பணத்துக்காகக் கூலிப் படையாகிக் கொலை செய்வதும், ஆள்களைக் கடத்தி கப்பம் கேட்டுப் பணம் பறிப்பதும் இவர்களுக்குப் புதியதல்ல.

ஆயுதங்களைக் காட்டி மக்களை மிரட்டி அதிகாரம் செலுத்தியவர்களும் இவர்கள்தான். எனவே, எந்த வழியிலாவது பணத்தையும் பதவியையும் அடையலாம் என்கிற வழியில் பழக்கப்பட்டவர் தன்னைப் போலவே என்னையும் நினைத்துவிட்டார் போலிருக்கின்றது.

நான் பணத்திற்கும் பதவிக்கும் விலைபோபவன் அல்லன் என்பதை வடக்கு முழுவதும் இருக்கும் மக்களில் எவரைக்கேட்டாலும் சொல்வார்கள் என்பதை அவருக்கு ஆணித்தரமாகச் சொல்லி வைக்க விரும்புகின்றேன்.

ஜனாதிபதியை எனது வீட்டுக்கு அழைத்தேன், அமைச்சர்களுக்கு விருந்து கொடுத்தேன் என்பதற்காக நான் அவர்களோடு இணங்கிப் போவேன் என்று நினைத்தது சிவசக்தி ஆனந்தனின் அறியாமை, அறிவு மட்டம்.

எனது கட்சி நாட்டின் தலைவர்களோடு சேர்ந்து ஒரு தீர்வைப் பெற இணக்கமான முறையில் முயன்று வந்தபோது அதற்கு உந்துசக்தியாக இருக்கும் வகையில் வாய்ப்புகளை உருவாக்கி ஜனாதிபதியையும் அமைச்சர்களையும் அழைத்துப் பேசி என்னால் முடிந்தவரையில் தமிழ் மக்களின் தேவைகளையும் போராட்ட நியாயங்களையும் புரிய வைக்க முயன்றிருக்கின்றேன். ஆனால், கட்சிக்கோ எனது தலைவர்களுக்கோ துரோகம் இழைக்க நினைத்ததில்லை.

ஆனால், சிவசக்திஆனந்தனும் அவரது கட்சித் தலைவரும் தமது கட்சியிலிருந்த மூத்த தலைவர்களுக்கு செய்த துரோகங்களைப் பற்றி ஈ.பி.டி.பியினரைக் கேட்டால் விலாவாரியாகச் சொல்வர். அப்படிப்பட்டவர், என்னை நோக்கிக் கை சுட்டிப் பேசவே தகுதியற்ற ஒருவர், நான் கட்சிதாவப் போகிறேன் என்று தெரிவித்ததை மக்கள் ஒருபோதும் நம்பத் தயாராயிருக்கவில்லை என்பதை அவர் இத்தனை நாள்களுக்குள் புரிந்துகொண்டிருப்பார்.

சிவசக்தி ஆனந்தன் இப்படிப் பொய் சொல்வது ஒன்றும் இது முதல் தடவையல்ல. தேர்தல் காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரணிலிடம் இருந்து 2 கோடி ரூபா பெற்றுவிட்டார்கள் என்று இவர் கூறிய பொய்யும் ஆடிய பித்தலாட்டமும் மக்கள் மனதில் இன்னமும் நீங்காமலேயே இருக்கின்றன. இதனால் சிவசக்தி ஆனந்தன் கூறுவதெல்லாம் பொய் தவிர வேறில்லை என்பதை உய்தறிய மக்களுக்கு அதிக நேரம் தேவைப்படாது.

சிவசக்தி ஆனந்தனைப் பார்த்து என்னுடைய ஒரேயொரு கேள்வி இதுதான், மஹிந்த பக்கம் போகாமல் இருப்பது குறித்து உங்கள் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ரணில் விக்கிரமசிங்கவுடன் நடத்திய தொலைபேசி உரையாடலை மக்களுக்குப் பகிரங்கமாக வெளியிட முடியுமா? அதை வெளியிட்டால் போதுமே உங்கள் பேரம் என்ன என்பதை மக்கள் தெளிவாக விளங்கிக் கொள்வதற்கு.

நான் பணம் பெறப்போகின்றேன் என்று பொய் சொன்ன சிவசக்தி ஆனந்தனால் உங்கள் கட்சித் தலைவர் ரணிலுடன் பேரம் பேசவில்லை என்று நிரூபிக்க சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கும் ரணிலுக்கும் இடையிலான உரையாடலை வெளியிட முடியுமா? இதுதான் என் சவால்” – என்றுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading